Paristamil Navigation Paristamil advert login

நடைபயிற்சி செய்யும் முறைகள்

நடைபயிற்சி செய்யும் முறைகள்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10469


 உடல் நலத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் முதலில் கடைப்பிடிப்பது நடைப்பயிற்சிதான். அதிகாலையில் பயிற்சி செய்தால், அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். சர்க்கரைநோய், உடல் பருமன், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைத் தவிர்க்கவும் முடியும். 

 
நடைப்பயிற்சியோ, ஓட்டப்பயிற்சியோ எதுவானாலும் அதை முறையோடு செய்யவில்லை என்றால், மூட்டு மற்றும் கால் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். 'ஓடுவதால் எந்த அளவுக்கு நன்மைகள் இருக்கிறதோ, அதேபோல் முறையாக ஓடவில்லை என்றால் பாதிப்புகளும் வரும். 
 
ஓட்டப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு 'ரன்னர்ஸ் நீ’ (runners knee) என்ற பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எடுத்த எடுப்பிலேயே மிகக் கடுமையாக ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதால் இது ஏற்படுகிறது. இதனால், மூட்டில் உள்ள குருத்தெலும்பு தேய்ந்து வலி ஏற்படும். 
 
ஆரம்பத்தில் இந்த வலியை உணர முடியாது. மாடிப்படிகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போதும் இந்தப் பாதிப்பை உணரலாம். எனவே, அதிக ஆர்வத்தில் கால்களுக்கு அதிக பளுவைக் கொடுக்கக் கூடாது. 
 
உடல் பயிற்சிக்காக ஓடுபவர்கள், ஓடும் விதத்தைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, ஓடும் தூரத்தைப் பார்க்கக் கூடாது. தொடர்ந்து நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபடும்போது சோர்வு, வலி ஏற்படும். இதனால் பயிற்சியில் ஈடுபடுவதற்கான மனநிலை பாதிக்கப்படும். எனவே, பயிற்சிக்கு இடையே அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். 
 
ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு உடலை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். இதயம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் நடைப்பயிற்சி செய்வதே போதுமானது. மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு ஓடுவது நல்லது. 
 
நடைப்பயிற்சியில், ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் பருத்தி மற்றும் இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது. இதனால் உடலின் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். காலுக்குப் பொருத்தமான, எடை குறைந்த காலணிகளை அணிந்து பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. 
 
மிகவும் இறுக்கமான காலணி அணிந்துகொண்டு நடைப்பயிற்சி செய்வது வலியை ஏற்படுத்தும். புதிதாக ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இரண்டு நிமிடம் ஓட்டம், ஒரு நிமிடம் நடைப்பயிற்சி என்று மாற்றிமாற்றிச் செய்ய வேண்டும். இதனால், இதயத்துக்கு அதிக சிரமம் ஏற்படுவது தவிர்க்கப்படும். 
 
சரியான நிலையில் நடப்பது மிகவும் அவசியம். தலையைத் தாழ்த்தியபடி முன்னோக்கிச் சாய்ந்தபடி நடப்பதால், கழுத்து வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி ஏற்படலாம். எனவே, முதுகை வளைக்காமல், நடக்கும்போதும் ஓடும்போதும் நேராக இருங்கள். 
 
முதுகின் இயல்பான தன்மையைப்  பின்பற்றுங்கள். வயிற்றை உள்ளிழுத்தபடி பயிற்சியில் ஈடுபடுங்கள். கால்கள் நடப்பதற்கு ஏற்ப நம் உடலை பேலன்ஸ் செய்யும் வகையில் கைகள் அசைகின்றன. இதனால் வேகமாக நடக்கலாம். கைகள் அசைக்காமல் நடக்கும்போது, அது முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும். 
 
எனவே, தாராளமாகக் கைகளை வீசி நடைபோடுங்கள். சம தளத்தில் நடைபயிற்சியில் ஈடுபடுங்கள். கரடுமுரடான ஓடுதளத்தைத் தவிர்த்துவிடுங்கள்.   நடைப்பயிற்சியை மிதமாகத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரியுங்கள். 
 
அதேபோல முடிக்கும்போது வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துப் பயிற்சியை முடியுங்கள். ஆண்களை விட, பெண்கள் உடலில்தான் கொழுப்பு அதிகம் சேருகிறது. 35 வயதைத் தாண்டிய பெண்கள், கண்டிப்பாக ஜாகிங் செய்ய வேண்டும். 
 
தேவை இல்லாத கொழுப்புகள் குறையும். ரத்த ஓட்டம் சீராகும். நாள் முழுக்கத் துடிப்புடன் செயல்பட முடியும். உயர் ரத்த அழுத்தம் குறையும். சர்க்கரையின் அளவு குறையும். எலும்பின் அடர்த்தி அதிகமாவதுடன் தசைகள் வலுவாகும்.
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்