போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணை சோதனை; இந்திய கடற்படை அசத்தல்!

28 சித்திரை 2025 திங்கள் 15:03 | பார்வைகள் : 142
அரபிக்கடலில் இந்திய கடற்படை எதிரி நாடுகளின் போர்க்கப்பல்களை ஏவுகணை மூலம் அழிக்கும் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி உள்ளது. இந்த வீடியோவை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது.
'பஹல்காம் படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களும் நிச்சயம் தண்டிக்கப்படுவது உறுதி,'' என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
இதனால் இந்தியா - பாக்., இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவி எதிரி நாடுகளின் போர்க்கப்பல்களை அழிக்கும் வகையிலான சோதனையை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை, இந்திய கடற்படை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ‛‛நீண்டதூரம் சென்று துல்லியமாக எதிரிகளின் போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் மல்டிபிள் ஏவுகணை சோதனையை இந்திய கடற்படை கப்பல் மேற்கொண்டுள்ளது. நம் நாட்டின் கடல்சார் நலன்களை பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.
தேச நலனை காப்பதற்கான பணியில், எந்நேரத்திலும், எந்த தாக்குதலுக்கும் தயாராகவே இருக்கிறோம்.'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.