Pont Neuf - பரிசின் முதல் மேம்பாலம்!! - வாங்க தெரிஞ்சுக்கலாம்!
6 தை 2017 வெள்ளி 11:30 | பார்வைகள் : 19674
பரிசில் சந்து பொந்து.. மூலை முடுக்கெல்லாம் மேம்பலங்கள் கொட்டிக்கிடக்கின்றன. எத்தனை உள்ளது என எண்ணுவதற்குள் வயதாகிவிடும். அவற்றையெல்லாம் விட்டுவிட்டு.. பரிசில் கட்டப்பட்ட மிகப்பழமையான பாலம் குறித்து பாக்கலாம்!
பரிசில் சென் நதியை ஊடறுத்து செல்லும் இந்த Pont Neuf எனும் பெயருடைய மேம்பாலமே பரிசில் மிகப்பழமையான மேம்பாலமாகும். Pont Neuf என்றால் 'புதிய பாலம்' என பெயர். ஆச்சரியமாக இருக்கிறதா...? விடுங்கள்.. கோடீஸ்வரன் என பெயர் வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பதில்லையா.. அதுமாதிரித்தான்!!
1578 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்த இந்த மேம்பாலம் 1607 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. Androuet du Cerceau குடும்பத்தைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர்கள் இந்த மேம்பாலத்தை கட்டியிருக்கலாம் என நம்பப்படுகிறது. 22 மீட்டர் அகலமும்
232 மீட்டர்கள் (761 அடி) நீளமும் கொண்டது இந்த மேம்பாலம்!
ஆரம்பத்தில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டன. மேம்பாலம் கட்டுவதற்குரிய அவசியங்கள் அதிகம் இருந்தாலும், அப்போது அதற்கான செலவு என்பது மிகப்பெரிய தொகை. கட்டுவதா வேண்டாமா என்ற குழப்பம் ஒருபக்கம்... பாலத்தை எப்படி கட்டுவது என்ற குழப்பம் மறுபக்கம்... இப்படி நீண்ட நாட்களாக குழப்பத்தில் இருந்து.. ஒருவழியாக பிரான்சின் Henry III மன்னரால் மேம்பாலம் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர், ஒருவழியாக மேம்பாலம் கற்கள் கொண்டு கட்டி முடிக்கப்பட்டது. பரிசில் உருவான முதல் பாலம்.. பரிஸ் மக்களுக்கு ஆர்வம் தாங்கமுடியவில்லை. மக்கள் படையெடுத்து மேம்பாலத்தை பார்வையிட்டார்கள். அவசியமே இல்லை என்றாலும்.. சும்மா சும்மா மேம்பாலத்தை கடந்து சென்றார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர், 'உலகில் முதன்முறையாக மனிதர்கள் தோன்றிய புகைப்படம் பரிசில் எடுக்கப்பட்டது!' என ஒரு பிரெஞ்சு புதினம் வெளியிட்டிருந்தோம். அந்த daguerreotype வகை புகைப்படம் இந்த மேம்பாலத்தில் இருந்து தான் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.