டாஸ்மாக் வழக்கை மாற்றுங்கள்: தமிழக அரசு மனு

5 சித்திரை 2025 சனி 12:30 | பார்வைகள் : 241
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னையில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தினர். இதன்பின், கொள்முதல், விற்பனை போன்றவற்றின் வாயிலாக, 1,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்ததாக, அமலாக்கத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
மாநில அரசின் அனுமதியின்றி அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்ட விரோதமானது என்று அறிவிக்கக்கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களை துன்புறுத்தக்கூடாது என உத்தரவிடக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை ஆரம்பத்தில் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, வழக்கு விசாரணையில் இருந்து தாமாக விலகுவதாக அறிவித்தது.
பின், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய புதிய அமர்வு, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டது. அதன்படி, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பதில் மனுவுக்கு, தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், அடுத்த விசாரணை, வரும் 8ல் நடக்கும் என்று அறிவித்தனர்.
ஆனால், அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி ராஜசேகரின் சகோதரர், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் வழக்கறிஞராக ஆஜராவதால், நீதிபதி ராஜசேகர் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அதை ஏற்க சம்பந்தப்பட்ட அமர்வு மறுத்துவிட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அமர்வில் முறையிட்டனர். வழக்கை விசாரிக்கும் எம்.எஸ்.சுப்பிரமணியம், ராஜசேகர் அமர்விலேயே முறையிடுமாறு, தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.
இதற்கிடையில் திடீர் திருப்பமாக, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தமிழக அரசு நேற்று தாக்கல் செய்தது. அதில், டாஸ்மாக் தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து, வேறு மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
'அரசியல் சாசனப்பிரிவு, 139ஏ கீழ், ஒரு வழக்கை ஒரு உயர் நீதிமன்றத்தில் இருந்து, வேறு ஒரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற, உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை உடனடியாக விசாரிக்கும்படி, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில், மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி நேற்று கோரிக்கை வைத்தார்.
'அடுத்த வாரம், உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருப்பதால், அதற்கு முன் இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்' என, தமிழக அரசு தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த தலைமை நீதிபதி, 'விரைவாக விசாரணைக்கு பட்டியலிடப்படும்' என்று தெரிவித்தார்.
ஒரு மாநில அரசே, தன் மாநில உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வேறு மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு, இதுவரை கோரிக்கை வைத்தது இல்லை; அதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்றதும் இல்லை; கடந்த 20 ஆண்டுகளாக, இதுபோன்ற விசித்திரத்தை பார்த்ததும் இல்லை என்று, மூத்த வழக்கறிஞர்கள் சிலர் கூறுகின்றனர்.
அரசு நிறுவனத்தில் நடந்த சோதனை தொடர்பான ஒரு வழக்கை, அரசே வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோருவதன் வாயிலாக, தற்போது வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தை குறைகூறுவது போல ஆகாதா என்றும், அதற்கான பின்னணி என்ன என்பதை விளக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருப்பதாகவும் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.