உக்ரைனியர்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் விதித்த கெடு

5 சித்திரை 2025 சனி 09:49 | பார்வைகள் : 332
மனிதாபிமான திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வசிக்கும் பல உக்ரேனியர்கள், தங்களுக்கான அனுமதி திரும்பப் பெறப்பட்டதாக குறிப்பிட்டு இந்த வாரம் மின்னஞ்சலைப் பெற்றனர்.
7 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும், அல்லது பெடரல் அரசாங்கம் உங்களைக் கண்டுபிடிக்கும் என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தொடர்புடைய மின்னஞ்சலானது தவறுதலாக அனுப்பப்பட்டதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், உக்ரைன் மீது 2022 ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட பரோல் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றும் உறுதி செய்துள்ளார்.
தொடர்புடைய மின்னஞ்சலை எத்தனை உக்ரேனிய மக்கள் கைப்பற்றினார்கள் என்பது தெரிய வரவில்லை.
ரஷ்யாவுடனான போரை அடுத்து உயிருக்கு பயந்து வெளியேறிய சுமார் 240,000 உக்ரைனியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக சட்ட அந்தஸ்தை ரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கடந்த மாதமே தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், தற்போது தவறுதலாக மின்னஞ்சல் அனுப்பியதாக அதிகாரிகள் தரப்பு கூறியிருந்தாலும், ட்ரம்ப் நிர்வாகம் எப்போது வேண்டுமானாலும் அப்படியான ஒரு முடிவெடுக்கலாம் என்றே கூறுகின்றனர்.
மின்னஞ்சலை வாசித்ததும் ஒரு நொடி மூச்சே நின்று போனது என்றும், அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் உக்ரேனிய பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்டு மாதம் புலம்பெயர் நிலையை புதுப்பித்துக் கொண்டதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்ற நிலையில், தற்போது கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல் உண்மையில் பீதியை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.