தமிழக வெள்ள பாதிப்புக்கு ரூ.522.34 கோடி கூடுதல் நிதி: மத்திய அரசு ஒதுக்கீடு

6 சித்திரை 2025 ஞாயிறு 03:56 | பார்வைகள் : 334
கடந்த ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்கு, 522.34 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த ஆண்டு இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்ட பீஹார், ஹிமாச்சல பிரதேசம், தமிழகம், புதுச்சேரியுடன், மத்திய அரசு தோளோடு தோள் நிற்கிறது.
முறையான வேண்டுகோள் கிடைக்கும் வரை காத்திருக்காமல், பேரிடர்கள் ஏற்பட்ட உடனேயே மத்திய குழுக்களை, இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது.
புயல், மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பீஹாருக்கு, 588.73 கோடி ரூபாய்; தமிழகத்திற்கு, 522.34 கோடி; ஹிமாச்சல பிரதேசத்திற்கு, 136.22 கோடி; புதுச்சேரிக்கு, 33.06 கோடி என, 1,280.35 கோடி ரூபாய் கூடுதல் நிதி வழங்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இது, மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதிக்கு கூடுதல் தொகையாகும். 2024- - 25ம் நிதியாண்டில், மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், 28 மாநிலங்களுக்கு, 20,264.40 கோடி ரூபாய்; தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ், 19 மாநிலங்களுக்கு, 5,160.76 கோடி ரூபாயை விடுவித்துஉள்ளது.
மாநில பேரிடர் தணிப்பு நிதியில் இருந்து, 19 மாநிலங்களுக்கு, 4,984.25 கோடி ரூபாய், தேசிய பேரிடர் தணிப்பு நிதியில் இருந்து, எட்டு மாநிலங்களுக்கு, 719.72 கோடி ரூபாயும் வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'தமிழகத்தில் ஏற்பட்ட புயல், மழை, வெள்ள பாதிப்புகளுக்கும், மறுசீரமைப்பு பணிகளுக்கும் 37,907 கோடி ரூபாய் வேண்டும்' என, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.