பிரதமர் மோடிக்கு இலங்கையில் மிக உயரிய விருது!

6 சித்திரை 2025 ஞாயிறு 07:57 | பார்வைகள் : 350
கொழும்பு நட்பை அலங்கரித்தவர் என்று பொருள்படும், 'மித்ர விபூஷணா' என்ற இலங்கையின் உயரிய விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இந்தியா - இலங்கை இடையேயான உறவை வலுப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவித்த இலங்கை அதிபர் அநுரா குமார திசநாயகே, இந்தியாவை குறிப்பாக பிரதமர் மோடியை நட்புக்கு இலக்கணம் என்று பாராட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, தெற்காசிய நாடான தாய்லாந்தின் பாங்காக்கில் நடந்த, 'பிம்ஸ்டெக்' எனப்படும், வங்கக் கடல் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முயற்சி அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றார். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு இலங்கைக்குச் சென்றார்.
வரவேற்பு
விமான நிலையத்தில், இதுவரை இலங்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு தனிச் சிறப்பு வரவேற்பு அவருக்கு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கொழும்பில் நடந்த நிகழ்ச்சியில், அதிபர் அநுரா குமார திசநாயகே, அந்த நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான, மித்ர விபூஷணா விருதை பிரதமர் மோடிக்கு வழங்கினார்.
இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்தியதில் ஆற்றிய பங்குக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது பிரதமர் மோடி பெறும், 22வது சர்வதேச கவுரவ விருதாகும்.
இலங்கையின் முந்தைய அதிபர் மஹிந்த ராஜபக்சேவால், 2008ல் நிறுவப்பட்டது இந்த விருது. சர்வதேச தலைவர்களை கவுரவிக்கும் வகையில், இந்த விருது சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது. மாலத்தீவுகள் முன்னாள் அதிபர் அப்துல் கயூம், மறைந்த பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
இந்த விருதைப் பெறும் முதல் இந்தியத் தலைவர் பிரதமர் மோடி.
''இந்த விருதைப் பெறுவதில் பெருமிதம் அடைகிறேன். இது எனக்கு கிடைத்த கவுரவம் அல்ல; 140 கோடி இந்தியர்களுக்கானது. இரு நாட்டுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவை மதிக்கும் இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,'' என, பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
திருக்குறள்
மேலும், 'செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு' என்ற திருக்குறளையும் கூறி, பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
அதாவது, 'நட்பு கொள்வது போன்று மிக அருமையான செயல் எதுவும் இல்லை. அதுபோல, நட்பை போன்று பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறெதுவும் இல்லை' என்பதே இந்த குறளின் பொருள்.
இது குறித்து நம் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் இருந்தபோது, இந்தியா உடனடியாகஉதவிக்கரம் நீட்டியது. மேலும், இரு நாட்டுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவதில், பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சிகளை கவரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளியிலான விருதின் நடுவில், அரிசி நிரம்பி வழியும் கும்பம் உள்ளது. இது செழுமை மற்றும் புதுப்பித்தலை குறிக்கிறது.
அதைச் சுற்றி, இலங்கையில் கிடைக்கும் ஒன்பது வகையான ரத்தினங்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதைச் சுற்றி, தாமரை இதழ்களால் சூழப்பட்ட உலக உருண்டை இடம்பெற்றுள்ளது. அதைச் சுற்றி, தர்ம சக்கரம் இடம்பெற்றுள்ளது.
இவை இரு நாடுகளுக்கு இடையேயான புத்த மதத் தொடர்பையும், கலாசார பாரம்பரியத்தையும் உணர்த்துவதாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
விருதை வழங்கிய இலங்கை அதிபர் திசநாயகே, இந்தியாவை, குறிப்பாக பிரதமர் மோடியை, நட்புக்கு இலக்கணம் என, பாராட்டினார்.
இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்'
அதிபர் திசநாயகே உடனான சந்திப்பைத் தொடர்ந்து வெளியிட்ட செய்தியில், பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளை முழுமையாக செயல்படுத்த அளித்த உறுதிமொழியை இலங்கை அரசு செயல்படுத்தும் என்று நம்புகிறோம். இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பாகவும் பேசினோம். இதில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அதிபர் விளக்கினார்.இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை இலங்கை அரசு முழுமையாக நிறைவேற்றும் என்று நம்புகிறேன். அதுபோல, அரசியலமைப்பு சட்டத்தில் கூறியுள்ளபடி, மாகாண தேர்தல்களை நடத்துவதற்கு முன்வரும் என்ற நம்பிக்கையும் உள்ளது.இலங்கை தமிழ் சமூகத்துக்காக, அங்கு இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள 10,000 வீடுகள் கட்டும் திட்டம் விரைவில் முடிவடையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இதைத் தொடர்ந்து, இலங்கை தமிழர் அமைப்புகளின் தலைவர்கள், பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அரசியலமைப்பு சட்டத்தின் 13வது பிரிவின்படி, மாகாண தேர்தல் நடத்துவது, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளித்தல் ஆகியவற்றை நிறைவேற்ற இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என, அவர்கள் குறிப்பிட்டனர்.இந்த சந்திப்புக்குப் பின், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் மோடி கூறியுள்ளதாவது:இந்தப் பயணத்தின்போது, மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், முயற்சிகள், இலங்கை வாழ் தமிழ் சமூகத்துக்கு, சமூக, பொருளாதார, கலாசார முன்னேற்றங்களை ஏற்படுத்தி தரும்.இலங்கை தமிழர்களுக்கு சமத்துவம், கண்ணியத்துடன், ஒருங்கிணைந்த இலங்கையில் அவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராணுவ ஒப்பந்தம்
இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பல வகைகளில் பயிற்சி வழங்கி வருகிறது. தற்போது இரு நாடுகளுக்கு இடையே முதல் முறையாக விரிவான ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தின்படி, ராணுவ அதிகாரிகளை பகிர்ந்து கொள்வது, பயிற்சி அளிப்பது, தொடர்ந்து இரு ராணுவத்துக்கும் இடையே தகவல் பரிமாற்றம், ராணுவத் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளில் ஒத்துழைப்பு ஆகியவை அடங்கும்.இரு நாட்டு ராணுவமும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது, கடற்படைகள் கூட்டுப் பயிற்சி மற்றும் ரோந்து மேற்கொள்வது ஆகியவற்றுடன், பயிற்சிகள், பயிலரங்குகள் உள்ளிட்டவை நடத்தவும், இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கையின் 750 ராணுவ அதிகாரிகளுக்கு, இந்தியாவில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
தீர்வு காண பேச்சு
இலங்கை அதிபருடனான சந்திப்புக்குப் பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பிரதமர் மோடி கூறியதாவது:மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். இதில் மனிதாபிமான அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.இலங்கையில் புனரமைப்பு, நல்லிணக்கம் குறித்தும் பேசினோம். அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை குறித்து அதிபர் திசநாயகே என்னைப் பாராட்டினார். இலங்கை அரசு, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என்றும், இலங்கை அரசியலமைப்பை முழுமையாக அமல்படுத்துவதற்கும், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கும் அதன் வாக்குறுதியை நிறைவேற்றும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை அதிபர் உறுதி
பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பைத் தொடர்ந்து இலங்கை அதிபர் அநுரா குமார திசநாயகே கூறியுள்ளதாவது:இந்தச் சந்திப்பின்போது, பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது முக்கியமான முன்னேற்றமாகும்.இலங்கையில் இருந்து, இந்தியாவின், ஐ.பி.கே.எப்., எனப்படும் அமைதிப் படை வெளியேறி, 35 ஆண்டுகளாகிறது. தற்போது இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையேயான ஒப்பந்தம், இரு தரப்புக்கும் கிடைத்துள்ள முக்கியமான வெற்றியாகும். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்.இரு நாட்டின் பரஸ்பர பாதுகாப்பு நலன்களை நாங்கள் பாதுகாப்போம். இலங்கை மண்ணை, இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக எவரையும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதியை அளிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
என்னென்ன ஒப்பந்தங்கள்
இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் திசநாயகே விரிவாக விவாதித்தனர். இந்த பேச்சின்போது, சில முக்கிய ஒப்பங்கள் கையெழுத்தாயின.1. மின்சாரத்தை பகிர்ந்து கொள்வது2. டிஜிட்டல் தீர்வுகளை பகிர்ந்து கொள்வதில் ஒத்துழைப்பு3. திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துவதில் ஒத்துழைப்பு. இந்தியா, இலங்கை, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இணைந்து செயல்படுத்த உள்ளன4. இந்தியா - இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை5. கிழக்கு மாகாணத்திற்கான பல்துறை நன்கொடை உதவிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை6. மருத்துவ துறையில் ஒத்துழைப்பு7. மருந்தியல் துறையில் ஒத்துழைப்பு.இதைத் தவிர, இந்தப் பயணத்தின்போது பல திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.1. மாஹோ - ஓமந்தை மேம்படுத்தப்பட்ட ரயில் பாதையை திறந்து வைத்தல்2. மாஹோ - அநுராதபுரம் பாதையின் சிக்னல் முறையின் நிர்மாணப் பணிகளை துவக்கி வைத்தல்3. சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா4. தம்புள்ளையில் அனைத்து பருவநிலைக்கும் ஏற்ற வேளாண் கிடங்கைத் திறந்து வைத்தல்5. இலங்கை முழுவதும், 5,000 மத நிறுவனங்களுக்கு, சோலார் எனப்படும் சூரிய மேற்கூரை அமைப்புகளை நிறுவுதல்.மேலும், இலங்கையின் கிழக்கு மாகாணங்களில் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக வழங்கப்பட்ட, 20,527 கோடி ரூபாய் கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திருகோணமலை - திருக்கோணேஸ்வரம் விகார், நுவரெலியாவில் சீதா எலியா விகார், அனுராதபுரத்தில் புனித நகர வளாகத் திட்டம் ஆகியவற்றின் மேம்பாட்டுக்கு இந்தியா நன்கொடை உதவி அளிக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
நினைவிடத்தில் மரியாதை
கடந்த 1987 ஜூலை 29ல் இந்தியாவும், இலங்கையும் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி வன்முறையும் உள்நாட்டு மோதல்களும் நிலவிய தமிழர் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில் நம் நாட்டு ராணுவத்தினர் இலங்கையில் களமிறக்கப்பட்டனர். இந்த காலக்கட்டத்தில் நம் ராணுவம் 1,200 வீரர்களை இழந்தது. அவர்களுக்காக இலங்கையின் கொழும்புவில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி நேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், 'இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கும் அமைதிக்குமான பணியில் உயிர் தியாகம் செய்த வீரர்களை இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூர்கிறேன்' என்றார்.