தொகுதி மறுசீரமைப்பு பற்றி பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் பதில் இல்லை: முதல்வர் ஸ்டாலின்

7 சித்திரை 2025 திங்கள் 05:55 | பார்வைகள் : 257
தொகுதி மறு சீரமைப்பு குறித்து பேச பிரதமரிடம் நேரம் கேட்டுள்ளேன். ஆனால் இதுவரை அதற்கு பதில் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
நீலகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் கோவை சென்ற அவர், அங்கு கொடீசியா மைதானத்தில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
பின்னர் கடந்தாண்டு ஒரே நேரத்தில் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16,000 பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;
2026ல் நாம் தான் வெற்றி பெற போகிறோம். நமது அணிதான் வெற்றி பெற போகிறது, நிச்சயம் அது தொடரும். ஆனால் இன்றைக்கு மோடி தலைமையில் இருக்கும் மத்திய அரசு நமது ஆட்சி போல் அல்லாமல் வாக்களிக்காத தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டு இருக்கிறது.
அவர்களின் வஞ்சனையையும் கடந்து எல்லா துறைகளிலும் வளர்ச்சியில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம். தமிழகத்துக்கு முறையான நிதியை வழங்கி தமிழகத்துக்கு திட்டங்களை செய்து தரக்கூடிய மத்திய அரசு இருந்தால் இன்றைக்கு இந்திய அளவில் இல்லை, உலகளவிலேயே நாம் தான் முதலிடத்தில் இருப்போம்.
இன்று காலையில் கூட தொகுதி சீரமைப்பு விவகாரத்தில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்படாது என்ற உறுதியை பிரதமர் வழங்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கையை நான் தெளிவாக குறிப்பிட்டுச் சொன்னேன்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து சட்டசபையில் நாம் அழுத்தமாக தீர்மானம் போட்டிருக்கிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களை எல்லாம் அழைத்து விவாதித்து இருக்கிறோம்.
தென் மாநிலங்கள் மட்டுமல்ல, வட மாநிலத்தில் இருக்கிற 7 மாநில தலைவர்களும், 3 முதல்வர்கள், பல்வேறு துணை முதல்வர்கள் ஆகியோரை கூட்டி அதில் தீர்மானம் போட்டு பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறோம். இன்னும் இதுவரை ஒப்புதல் வரவில்லை.
ஆக இதற்கிடையில் நீங்கள் தமிழகம் வருகிறீர்கள். வரக்கூடிய நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும். அதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று நான் ஒரு கோரிக்கை வைத்தேன். ஆனால் மக்களின் முக்கியமான பிரச்னைகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்க்கிறவர்களுக்கு நாம் என்ன செய்ய முடியும். வேறு வழியில்லை.
அப்படி தமிழகத்தை தவிர்க்கக்கூடிய மக்களுக்கு மீண்டும் தமிழகத்தில் உங்களுக்கு இடமே இல்லை என்ற பதிலைத்தான் வரக்கூடிய தேர்தலில் நீங்கள் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.