முதல்வர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்; அண்ணாமலை

7 சித்திரை 2025 திங்கள் 07:57 | பார்வைகள் : 353
பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்காமல், முதல்வர் ஸ்டாலின் அவமானப்படுத்தியுள்ளார். இதற்கு, தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: பாம்பன் பாலம் சிறப்பாக திறக்கப்பட்டுள்ளது. ரு.8,300 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்காதது வருத்தம் அளிக்கிறது. அதற்கு முதல்வர் சொல்லியிருக்கும் காரணம் கூட ஏற்புடையது கிடையாது. பிப்., மாதம் முதலே பாம்பன் பாலம் திறப்பு விழாவுக்கு நாள் குறிக்க மாநில அரசுடன் பேசியது நமக்கு தெரியும்.
நமக்காக ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களை கொடுப்பதற்காக இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ளார். அப்படியிருக்கும் போது, பிரதமரை வரவேற்க வேண்டியது, மாநிலத்தின் நம்முடைய பிரதிநிதியாக இருக்கும் முதல்வரின் தலையாய கடமை.
ஆனால், முதல்வர் அரசியல் செய்து, ராமேஸ்வரத்தில் வெயில் அதிகமாக இருப்பதால், ஊட்டிக்கு போயிட்டார். முதல்வருக்கு வெயில் தாங்காது போல. இதனால், வண்டிய ஊட்டிக்கு விடுடா என்று சொல்லி, ஊட்டி குளிரில் இதமா, பதமா இருக்க அங்க போய் விட்டார். இதனை பா.ஜ., கடுமையாக கண்டிக்கிறது.
முதல்வர் கடமையை செய்ய தவறிவிட்டார். பிரதமருக்கு அந்த மரியாதையை கொடுத்திருக்க வேண்டும். பிரதமரை அவர் அவமானப்படுத்தியுள்ளார். இதற்கு, தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஊட்டியில் உட்கார்ந்து கொண்டு அரசியல் பேசுகிறார். தொகுதி மறுசீராய்வு பற்றி பிரதமர் பேச வேண்டும் கூறுகிறார். முதல்வர் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். அவர் நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு நாடகத்தை மக்கள் முழுமையாக உணர்ந்து விட்டார்கள். தொகுதி சீரமைப்பு வரும் போது, அப்போது தெரியும், எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு இருக்காது என்று.
இதை ஒரு காரணமாக வைத்து ஊட்டியில் முதல்வர் ஒளிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. பிரதமர் பேசும் போது, முக்கிய விஷயங்களைப் பற்றி பேசினார்.
நீங்கள் எல்லாம் தாய்தமிழை பற்றி பேசுகிறீர்கள். மக்களின் வரிப்பணத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், எனக்கு அனுப்பக் கூடிய கடிதங்களில் கையெழுத்தையே ஆங்கிலத்தில் தான் போடுகின்றனர். அப்பறம் என்ன தமிழ் வளர்ச்சியை பற்றி பேசுறீங்க. இங்குள்ள மருத்துவப் படிப்பை ஏன் தமிழில் கொடுக்க மாட்டிறீங்க.
10 ஆண்டு கால ஆட்சியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட, பா.ஜ., கூட்டணி ஆட்சியில் தான் தமிழகத்திற்கு ரயில்வே துறையில் 7 மடங்கு நிதி கொடுத்துள்ளோம். அப்படியிருந்தும் சில அரசியல்வாதிகள் அழுவதை மட்டுமே முழுநேர வேலையாக வைத்துள்ளார்கள் என்பதை பிரதமர் சுட்டி காட்டியுள்ளார்.
மாநிலத்தின் மீது அக்கறை இருந்தால், முதல்வர் இங்கு வந்திருக்க வேண்டும். வரவில்லை. ஆனால், அடுத்த முறை இந்த தவறு செய்யாமல், தமிழகத்தின் நலனுக்கு முதல்வரும் துணை இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன்.
இது அரசு நிகழ்ச்சி என்பதால் மேடையில் அமரவில்லை. மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் எங்களுக்கு வேலை இல்லை. இதனால், தான் கட்சியின் சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன், எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் ஆகியோர் இருந்தனர். ஆசியாவிலேயே எங்கும் இல்லாத வகையில், 'வெர்ட்டிக்கல் லிப்ட்' பாம்பன் பாலத்தில் தான் உள்ளது, எனக் கூறினார்.