தமிழகத்திற்கு பணமே கொடுக்கவில்லை என்று அழுபவர்கள். அழட்டும்! மோடி

7 சித்திரை 2025 திங்கள் 09:59 | பார்வைகள் : 338
தமிழகத்திற்கு எவ்வளவு நிதி கொடுத்தாலும், சில பேருக்கு காரணமே இன்றி அழும்பழக்கம் இருக்கிறது. அவர்கள் அழுது கொண்டே இருக்கட்டும். அவர்களால் அழத்தான்முடியும்; அழுதுவிட்டு போகட்டும். 10 ஆண்டுகளில், தமிழகத்திற்கு மூன்று மடங்கு நிதிகொடுத்திருக்கிறேன்,'' என, ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார். 'மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை' என, தி.மு.க., அரசு தொடர்ந்துகுற்றச்சாட்டு கூறி வருவதற்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாறு மோடி தெரிவித்தார்.
ராமேஸ்வரம் பாம்பனில், 550 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தை,பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.தவிர விழுப்புரம் -- புதுச்சேரி, பூண்டியங்குப்பம் -- சட்டநாதபுரம் பிரிவு, சோழபுரம் -- தஞ்சாவூர் பிரிவு நான்குவழிச்சாலை திட்ட பணிகளையும் துவக்கி வைத்து பேசியதாவது:
என் அன்பு தமிழ் சொந்தங்களே. இந்த புண்ணிய ராமேஸ்வரம் மண்ணில் இருந்து, நாட்டு மக்களுக்கு ராமநவமி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சில மணி நேரத்திற்கு முன், அயோத்தி ராமர் கோவிலில், பாலராமருக்கு சூரிய கதிர்கள் திலகம் வைத்த நிகழ்வு நடந்தது.கோஷமிட்டனர்
பகவான் ராமரின் வாழ்க்கை, அவரது சிறப்பான ஆட்சியில் நமக்கு கிடைக்கும் உத்வேகம் தேசத்தை கட்டமைக்கும் ஆதாரமாக இருக்கிறது. இன்று ராமநவமி என்பதால், என்னோடு சேர்ந்து சொல்லுங்கள். ஜெய்ஸ்ரீராம்... ஜெய்ஸ்ரீராம்... உடன், மக்களும் கோஷமிட்டனர்.
ராமநாத சுவாமி
கோவிலில் வழிபட்டதை, எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். இன்று சிறப்பு நாள். 8,300 கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்தது.இது சாலை, ரயில் திட்டங்கள்; தமிழகத்தின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும்.
அப்துல் கலாம் மண்
இது, அப்துல் கலாம் மண். அறிவியலும், ஆன்மிகமும் ஒன்றிணைந்தது என்பதை, அவரது வாழ்க்கை நமக்கு கற்பித்துள்ளது. அதுபோல, ராமேஸ்வரம் வரையிலான புதிய பாம்பன் பாலம் பாரம்பரியத்தையும், தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கிறது.ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு நகரத்தை, 21ம் நுாற்றாண்டின் பொறியியல் அதிசயத்தின் வாயிலாகஇணைத்திருக்கிறோம்.
இப்பாலம், இந்தியாவின் முதல் செங்குத்து துாக்கு பாலம். பெரிய கப்பல்களும் இதன் கீழ் செல்ல முடியும். ரயில் வேகத்தோடு செல்லும். பல ஆண்டுகளாக இப்பாலத்தை அமைக்க கோரிக்கை இருந்தது. மக்கள் ஆசியுடன் இப்பணியை முடிக்கும் பெருமையை நாங்கள் பெற்றோம்.பாம்பன் பாலம் எளிமையான வணிகத்தையும், போக்குவரத்தையும் ஊக்குவிக்கிறது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் ஒரு நேர்மறை தாக்கத்தை இப்பாலம் ஏற்படுத்தும்.
புதிய ரயில் சேவை, ராமேஸ்வரம் -- சென்னை மற்றும் நாடு முழுவதும் ரயில் சேவையை மேம்படுத்தும். தமிழக வர்த்தகம் மற்றும் சுற்றுலாவிற்கு இது பெரும் பலன் அளிக்கும்.இளைஞர்களுக்கு புதிய தொழில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
காரணமின்றி அழுகை
கடந்த, 10 ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சி இரட்டிப்பாகி இருக்கிறது. ரயில், சாலை,விமானம், துறைமுகம், மின்னாற்றல், எரிபொருள் அளவை, ஆறு மடங்கு உயர்த்தியுள்ளோம். தமிழகத்தின் உள்கட்டமைப்புக்கு, மத்திய அரசின் பங்கு முக்கியமானது.
கடந்த, 10 ஆண்டுகளில் தமிழகத்தின் ரயில்வே நிதி ஒதுக்கீடு ஏழு மடங்கிற்கும் அதிகமாகஅதிகரிக்கப்பட்டுள்ளது. நிதி கொடுத்தாலும், சில பேருக்கு காரணமே இன்றி அழும் பழக்கம் இருக்கிறது. அவர்கள் அழுதுக்கொண்டே இருக்கட்டும். அவர்களால் அழத்தான் முடியும்.அழுதுவிட்டு போகட்டும்.
மூன்று மடங்கு நிதி
கடந்த, 2014க்கு முன்பை விட, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மூன்று மடங்கு நிதி வழங்கப்பட்டுஉள்ளது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு இது மிக அதிக உதவி. தி.மு.க., கூட்டணிஆட்சியின் போது ரயில்வே திட்டங்களுக்கு, 900 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டது. நாங்கள், 6000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம். ராமேஸ்வரம் உட்பட, 77 ரயில் நிலையங்களைநவீனப்படுத்தும் பணி நடக்கிறது.
கடந்த, 10 ஆண்டுகளில் இந்தியா சமூக உட்கட்டமைப்பு வசதிகளில் இதுவரை இல்லாத அளவு முதலீடு செய்துள்ளது. எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தின் கோடிக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கும், இதன் பலன் கிடைக்கிறது. நான்கு கோடிக்கும் அதிகமான வீடுகள் நாடு முழுவதும் ஏழை குடும்பங்களுக்கு கிடைத்துள்ளன. பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ்,12 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு கிடைத்துள்ளது.10 ஆண்டுகளில் கிராமங்களில், 12 கோடி குடும்பங்கள் முதன்முறையாக குழாய் மூலம் குடிநீரை பெறுகிறார்கள். இதில், 1.11 கோடி குடும்பங்கள் தமிழகத்தை சேர்ந்தவை.
மக்களுக்கு தரமான மருந்து வழங்குவது அரசின் கடமை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, 8,000 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது. தமிழகத்தில், 1,400க்கும் அதிகமானமக்கள் மருந்தகங்கள் உள்ளன. இங்கு, 80 சதவீத தள்ளுபடியில் மருந்து கிடைக்கிறது. இதன் வாயிலாக, 700 கோடி ரூபாய் மிச்சமாகி இருக்கிறது.
இளைஞர்கள் மருத்துவம் படிக்க வெளிநாடுளுக்கு செல்லக்கூடாது என்பதற்காக, தமிழகத்தில், 11 மருத்துவ கல்லுாரிகள் துவக்கப்பட்டுள்ளன. ஏழை மாணவர்களுக்கும், மருத்துவ படிப்பு கிடைக்கும் வகையில், பாடத்திட்டங்களை தமிழில் கொண்டு வர, மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன். மீனவர்கள் துாக்கு மேடையை முத்தமிட சென்ற காலக்கட்டத்தில், அவர்களை மத்திய அரசு மீட்டுள்ளது. இதுவரை, 3,700க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். ஓராண்டில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளோம்.
தமிழில் கையெழுத்து
எனக்கு சில தலைவர்கள் தமிழகத்தில் இருந்து கடிதம் எழுதுவது ஆங்கிலத்தில் இருக்கும். கையெழுத்து கூட ஆங்கிலத்தில் தான் போடுகின்றனர். தமிழ் மொழியில் போடக்கூடாதா என, நான் வியப்பதுண்டு. சக்தி, தன்னிறைவு கொண்ட பாரதம் என்ற லட்சியத்திற்காக நாம் பயணிக்கிறோம். 100 ஆண்டுகளுக்கு முன் இப்பாலத்தை கட்டியவர் குஜராத்தைச் சேர்ந்தவர். இன்று திறந்து வைத்ததும், குஜராத்தில் பிறந்த நான். இவ்வாறு மோடி பேசினார்.
ராமர் பாதையில் மோடி
மத்திய அமைச்சர் முருகன் பேசியதாவது: ராமநவமி தினமான இன்று ராமர் வந்த பாதையில், பிரதமர் மோடி வந்துள்ளார். மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்த பின், முதன்முறையாக தமிழகம் வந்துள்ளார். கடந்தாண்டு ஜன., 22ல் ராமேஸ்வரத்தில் துவங்கி, புனித பயணம் மேற்கொண்டு அயோத்தியில் கும்பாபிஷேகம் செய்தார். இலங்கையின் உயரிய விருது பெற்று, ராமநவமி தினத்தன்று ராமேஸ்வரம் வந்துள்ளார். பிரதமர் மோடி, தமிழகம் வரும் போதெல்லாம் திட்டங்களோடு தான் வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
டிசம்பருக்குள் பணி நிறைவு
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:கடந்த, 2014க்கு முன் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, 800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், 10 ஆண்டுகளில், 6,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு பணிகள் அதிகம் நடக்கின்றன. ராமேஸ்வரம் ஸ்டேஷன் சீரமைக்கப்பட்டு, இந்தாண்டு டிசம்பரில் பயன்பாட்டிற்கு வரும். தமிழக அரசு மத்திய அரசுக்கு நிலம் கையகப்படுத்த உதவ வேண்டும். ராமேஸ்வரம், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை வழியாக மயிலாடுதுறைக்கு மத்திய அரசு சாலை வசதி ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
தமிழர்களின் பாரம்பரியமான வேட்டி, சட்டையில் கலக்கல்
ராமேஸ்வரம்,: பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி, சட்டையில் வந்து, பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்து, ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். ஸ்ரீ ராமரின் அவதார தினமான ராமநவமியான நேற்று, பிரதமர் மோடி இலங்கையில் இருந்து ஹெலிகாப்டரில் மண்டபத்தில் இறங்கியதும், அங்கிருந்த தனி அறைக்கு சென்று தமிழர்களின் பாரம்பரியமான வேட்டி, சட்டை அணிந்து கலக்கலாக காரில் ஏறி, பாம்பன் வந்து புதிய பாலம், ரயில் போக்குவரத்தை துவக்கினார். பின், ராமேஸ்வரம் கோவில் கிழக்கு வாசலில் வேட்டி, வெள்ளை சட்டையுடன் பிரதமர் மோடி இறங்கியதும், அங்கு கூடியிருந்த ஏராளமானோர் உற்சாகத்தில், 'மோடி ஜி... மோடி ஜி... பாரத் மாதா கீ ஜெய்' என, கோஷமிட்டு உற்சாகமாக வரவேற்றனர்.
3வது முறை
↓ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி 2017 ஜூலை 27ல் திறந்து வைத்தார் ↓அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக விரதம் இருந்த பிரதமர் மோடி, 2024 ஜன., 20ல் ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து புனித தீர்த்தம் எடுத்துச் சென்றார் ↓மூன்றாவது முறையாக நேற்று ராமேஸ்வரம் வந்து தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
மோடிக்கு நன்றி கூறாத முதல்வர் ஸ்டாலின்
தமிழ் மக்களுக்கு, 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிமுகம் செய்து, ஏழு மடங்கு ரயில்வே திட்டங்களை கொடுத்து, நல்ல திட்டங்களை நிறைவேற்றும் நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றிருக்க வேண்டும்.
ஒரு மாநிலத்திற்கு, பிரதமர் வரும் போது, அம்மாநில முதல்வர், பிரதமரை வரவேற்க வேண்டும் என்பது விதி. ஆனால், பிரதமரை புறக்கணிக்க வேண்டும் என்றே ஸ்டாலின் ஊட்டி சென்றுள்ளார். எந்த மாநிலத்திலும் இல்லாத, உயர் தொழில்நுட்பத்தில் உருவான பாம்பன் பாலத்தை, பிரதமர் மோடி திறந்துள்ளார். அதை வரவேற்று, நன்றி சொல்லாமல், புறக்கணித்த முதல்வரை, தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
- தமிழிசை
தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னர்.
பிரதமர் மோடி விழா துளிகள்
பிரதமர் மோடி இலங்கை அநுராதபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மன்னார் வளைகுடா கடல் வழியாக மண்டபம் வந்த போது, தனுஷ்கோடி --- இலங்கை தலைமன்னார் இடையே, 35 கி.மீ.,யில் ராமபிரான் அமைத்த ராம் சேது பாலத்தை பார்வையிட்டு தரிசித்தபடி வந்தார்.
ராமேஸ்வரத்தில் விழா முடிந்ததும், அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, மாலை, 4:00 மணிக்கு மண்டபத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை சென்றார்.