தெரிந்த ஆன் இதால்கோ - தெரியாத தகவல்கள்!
27 மார்கழி 2016 செவ்வாய் 12:30 | பார்வைகள் : 19514
எப்போதும் ஊடகங்களில், செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெயர் 'ஆன் இதால்கோ!' பரிசின் நகர முதல்வர்! நலத்திட்டங்கள், புதிய புதிய நடவடிக்கைகள் மேற்கொள்வதில் இவர் கை தேர்ந்தவர். சரி.. ஆன் இதால்கோவை உங்களுக்கு நன்றாக தெரியும்... இதோ... அவர் குறித்த சில தெரியாத தகவல்கள்!!
ஆன் இதால்கோ ஸ்பெயினின் சான் பெர்னாண்டோ நகரில் பிறந்தார். இவர் ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு என இரட்டை குடியுரிமை கொண்டவர்.
1959 ஆம் ஆண்டு, ஜூன் 19ம் திகதி பிறந்த இவருக்கு 57 வயதாகிறது. தோற்றத்தில் அப்படித்தெரிகிறதா என்ன?! இவரின் தாத்தா ஸ்பெயினின் ஒரு அரசியல் வாதி. ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக அகதியாக பிரான்சுக்குள் தஞ்சம் புகுந்து, தனது இளமை வாழ்க்கையை ஆரம்பித்தார். இவரது தந்தை ஒரு 'எலெக்ட்ரீஷியன்'. லியோன் நகரில் கல்வி வாழ்க்கையை தொடர்ந்த அவர், தனது 14வது வயதில் பிரெஞ்சு குடியுரிமையை பெற்றுக்கொண்டார்.
பின்னர், பரிசின் 15ஆம் வட்டாரத்துக்கு குடி வந்து, தனக்கான அரசியல் பாதையை உருவாக்கினார். Socialist Party கட்சியில் இணைந்து, 15ஆம் வட்டார கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். அந்த போட்டி உட்பட பல தொடர் தோல்விகள். ஆனாலும் தன்னை பலரால் கவனிக்கவைக்கத்தவறவில்லை. பல முயற்சிகளின் பின்னர் ஆன் இதால்கோ, 2014 ஆம் ஆண்டு பரிசின் நகர முதல்வர் ஆகிறார்.
பரிசை தூய்மையாகவும், சுற்றுச்சூழல் மாசடையாமல் பார்த்துகொள்வதற்காகவும் சிறப்பு கவனிப்பை செய்து வருகிறார் ஆன் இதால்கோ. மேலும் அகதிகளுக்காக ஒரு 'முகாம்' அமைத்து அடிப்படை தேவைகள் நிவர்த்தி செய்து வருவது இவரின் சமீபத்திய சாதனை. அரசியலில் மேலும் பல படிகள் முன்னேற வாழ்த்துவோம்!!