வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் இன்று வழக்கு- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

7 சித்திரை 2025 திங்கள் 14:14 | பார்வைகள் : 285
வக்பு சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததால், சட்ட வடிவம் பெற்று விட்டது. இதற்கிடையே, வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த நிலையில், வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக இன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் நேற்று பேசியதாவது:-
வக்பு வாரிய திருத்த சட்டத்தை நள்ளிரவு 2 மணிக்கு மத்திய பா.ஜனதா அரசு அனைத்து எதிர்க்கட்சிகளுடன் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றி இருக்கிறார்கள். வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு மக்களவையில் ஆ.ராசா எம்.பி.யும், மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி.யும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பேசினர். ஆனால் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை ஒரு நிமிடம் மட்டுமே மாநிலங்களவையில் பேசினார்.அதுவும் அ.தி.மு.க. எதிர்க்கிறதா?, ஆதரிக்கிறதா? என்று கூட அவர் சொல்லவில்லை. அதுமட்டுமல்ல, தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்வோம் என்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறேன். நாளை (அதாவது இன்று) நம்முடைய துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மூலம் வழக்கு தொடுக்கப்படும்" என்றார்.