காங்., மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்

9 சித்திரை 2025 புதன் 09:29 | பார்வைகள் : 973
காங்., மூத்த தலைவரும் முன்னாள் தலைவருமான குமரி அனந்தன்,93 காலமானார். வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி (08-ம் தேதி இரவு ) காலமானார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதலைவராக இருந்த குமரி அனந்தன், 5 முறை எம்.எல்.ஏ.,வாகவும், ஒரு முறை எம்.பி.யாகவும் பதவி வகித்தார்.
இலக்கிய செல்வர் என அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தார். . இவருக்கு ஒரு மகன், மகள் தமிழிசை உள்பட 4 மகள்கள் உள்ளனர். இவர் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார். பார்லிமென்ட்டில் தமிழில் கேள்வி எழுப்பும் உரிமையை பெற்று வந்தவர் என்ற பெருமை பெற்றார்.
சாத்தான் குளம் ராதாபுரம், திருவெற்றியூர் தொகுதிகளில் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977 ம் ஆண்டில் நடைபெற்ற லோக்சபா தேர்லிலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என பெயர் வர காரணமாக இருந்தவர்.
தமிழில் தந்தி விண்ணப்பங்கள், மணியார்டர் போன்றவற்றில் தமிழ் இடம் பெற வேண்டும் என போராடி பெற்றுத்தந்தவர். தமிழில் இலக்கிய புலமை பெற்றவர், இலக்கிய செல்வர் மற்றும் இலக்கிய பேச்சாற்றல் மிக்க தமிழ் இலக்கியவாதி என பன்முகங்களை கொண்டவர். மறைந்த காங்., எம்.பி., வசந்தகுமார் இவரது சகோதரர் ஆவார்.
தமிழ் காங்கிரஸ் சார்பில் பல முறை யாத்திரை மேற்கொண்டார். மறைந்த குமரி அனந்தனுக்கு , 2024ம் ஆண்டு தமிழக அரசால் தகைசால் விருது வழங்கப்பட்டது. மறைந்த குமரி அனந்தன் உடல் சென்னை சாலி கிராமத்தில் உள்ள தமிழிசை இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.