Paristamil Navigation Paristamil advert login

12,500 ஆண்டுகளுக்கு முன் அழிந்த விலங்கு இனம் - மீண்டும் உயிர்ப்பித்த விஞ்ஞானிகள்

12,500 ஆண்டுகளுக்கு முன் அழிந்த விலங்கு இனம் - மீண்டும் உயிர்ப்பித்த விஞ்ஞானிகள்

10 சித்திரை 2025 வியாழன் 09:56 | பார்வைகள் : 204


உலகில் வாழ்ந்த வலிமையான வேட்டையாடும் திறன்கொண்ட விலங்குகளில் ஒன்று Aenocyon dirus எனப்படும் ஒரு வகை ஓநாயாகும்.

இது கடந்த 10,000- 12,500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போனது. அதன் பிறகு இத்தனை ஆண்டுகளாக அப்படியொரு உயிரினமே பூமியில் இல்லாத சூழலே இருந்தது. ஆனால், அதிநவீன டிஎன்ஏ அனாலிசிஸ், குளோனிங் மற்றும் மரபணு திருத்தம் தொழில்நுட்பங்களை (cloning and gene-editing technology)பயன்படுத்தி அந்த ஓநாயை மீண்டும் விஞ்ஞானிகள் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர்.

கோலஸ்ஸால் பயோசயின்சஸ் என்ற நிறுவனம் இந்த சாதனையைப் படைத்துள்ளது. உலகில் அழிந்து போன உயிரினம் ஒன்று மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இதன் மூலம் ஏனைய அழிந்துபோன உயிரினங்களையும் கூட நாம் மீண்டும் பூமிக்குக் கொண்டு வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே அறிவியல் துறையில் இது மிக முக்கியமான ஆய்வாகக் கருதப்படுகிறது.

இதற்காக விஞ்ஞானிகள் குழு அழிந்துபோன டையர் ஓநாய் புதைபடிவங்களிலிருந்து மரபணுவைப் பிரித்தெடுத்துள்ளனர். அமெரிக்காவின் ஓஹியோவிலிருந்து 13,000 ஆண்டுகள் பழமையான டையர் ஓநாயின் பல் மற்றும் இடாஹோவிலிருந்து 72,000 ஆண்டுகள் பழமையான டையர் ஓநாயின் மண்டை ஓட்டில் இருந்து டிஎன்ஏவை விஞ்ஞானிகள் பிரித்து எடுத்துள்ளனர்.

இத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட இந்த மரபணு சிதையாமல் பத்திரமாக இருந்துள்ளது. இதனால் அந்த டிஎன்ஏவை எடுத்து விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளனர்.

ஓநாய் இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்டோடெலியல் செல்களை (EPCs) பயன்படுத்தி குளோனிங் செய்துள்ளனர்.

இந்த செல்கள் டையர் ஓநாய் வகைகளுக்கு ஏற்ப திருத்தம் செய்யப்பட்டு, அணுக்கரு நீக்கப்பட்ட சாம்பல் ஓநாய் முட்டைகளில் அவை பொருத்தப்பட்டன.
பின்னர் அந்த கருக்கள் நாய்களுக்கு மாற்றப்பட்டன. அந்த நாய் தான் இப்போது மூன்று ஆரோக்கியமான டையர் ஓநாய் குட்டிகளான ரோமுலஸ், ரெமுஸ் மற்றும் கலீசி ஆகியவற்றை ஈன்றுள்ளது.

இது அறிவியல் உலகில் மாபெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.  மேலும், இது வெறும் தொடக்கம் தான் என்றும் வரும் காலத்தில் மேலும் பல விலங்குகளுக்கு இதுபோல உயிர் கொடுக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்