காஸா : பிரான்சின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி மக்ரோன்!!

12 சித்திரை 2025 சனி 06:32 | பார்வைகள் : 769
X உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீது பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக காஸா தொடர்பான பிரான்சின் நிலைப்பாடு தொடர்பாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த விமர்சனங்களுக்கு நேற்று ஏப்ரல் 11 - வெள்ளிக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பதிலளித்துள்ளார். “நான் எல்லாவற்றையும் படிக்கிறேன். காஸாவுக்கான எங்கள் நோக்கங்கள் குறித்த முட்டாள் தனமான விமர்சனங்கள் அனைத்தையும் நான் படிக்கிறேன்!” என தெரிவித்தார்.
மேலும், “எங்கள் நோக்கம் தெளிவானது. பிரான்சின் நிலைப்பாடு தெளிவானது. ஆம் அது காஸாவில் அமைதியை ஏற்படுத்துவது ஆகும். இஸ்ரேலில் அமைதி ஏற்படுத்துவதாகும். பாலஸ்தீனத்தில் அமைதி ஏற்படுத்துவதாகும்!” என அவர் தெரிவித்தார்.
அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தல், நீடித்த போர் நிறுத்தம், மனிதாபிமான உதவிகளை மீண்டும் உடனடியாக தொடங்குதல், இருமாநில ஒற்றுமை மற்றும் அமைதியை பேணுவதற்குரிய தீர்வை தேடுதல் ஆகியவையே பிரான்சின் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.