'குட் பேட் அக்லி' படக்குழுவினர்களுக்கு இளையராஜா நோட்டீஸ்..

15 சித்திரை 2025 செவ்வாய் 11:22 | பார்வைகள் : 276
அஜித்தின் ’குட் பேட் அக்லி’ படத்தின் குழுவினர்களுக்கு இசைஞானி இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான "குட் பேட் அக்லி" என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாயிற்று. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, கிட்டத்தட்ட ரூ.200 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், இசைஞானி இளையராஜா, தான் இசையமைத்த மூன்று பாடல்கள் தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டதாக கூறி, படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. "ஒத்த ரூபாய் தாரேன்", ’ என் ஜோடி மஞ்ச குருவி", "இளமை இதோ இதோ" ஆகிய பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாகவும், இதனால் ஏற்பட்ட இழப்பீடாக ரூ.5 கோடி நஷ்ட ஈடாக கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த மூன்று பாடல்களையும் உடனடியாக படத்தில் திரையிடுவதை நிறுத்த வேண்டும் என்றும், ஏழு நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும் நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லை என்றால், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உட்பட படக்குழுவினர் என்ன பதிலளிக்கப் போகிறார்கள் என்பது கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கிறது.