தனுஷ் பட இயக்குநர் திடீர் மரணம்..
15 சித்திரை 2025 செவ்வாய் 11:24 | பார்வைகள் : 3602
தனுஷ் மற்றும் ஸ்ரீகாந்த் நடித்த படங்களை இயக்கிய இயக்குனர் எஸ். எஸ். ஸ்டான்லி காலமானதை அடுத்து, திரையுலகினர் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான, ஸ்ரீகாந்த் நடித்த "ஏப்ரல் மாதத்தில்" என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் எஸ். எஸ். ஸ்டான்லி. இந்த படம் நல்ல வரவேற்பும் வெற்றியும் பெற்றது. அதன்பின், தனுஷ் நடித்த "புதுக்கோட்டையிலிருந்து சரவணன்" என்ற படத்தை இயக்கினார்.
மேலும், மீண்டும் ஸ்ரீகாந்த் நடித்த "மெர்குரி பூக்கள்" மற்றும் "கிழக்கு கடற்கரைச் சாலை" ஆகிய படங்களை இயக்கினார். மொத்தம் நான்கு படங்களை இயக்கியிருந்தாலும், "பெரியார்", "இராவணன்" உள்பட சில படங்களில் அவர் நடித்தும் உள்ளார். குறிப்பாக, "பெரியார்" படத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை கேரக்டரில் இவர் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இயக்குனர் எஸ். எஸ். ஸ்டான்லி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 58. அவருடைய இறுதி சடங்குகள் இன்று மாலை வளசரவாக்கம் மின் மயானத்தில் நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது, எஸ். எஸ். ஸ்டான்லி உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan