Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானின் 300 ட்ரோன்களை வீழ்த்திய இந்தியா

பாகிஸ்தானின் 300 ட்ரோன்களை வீழ்த்திய இந்தியா

10 வைகாசி 2025 சனி 05:50 | பார்வைகள் : 929


இந்தியாவுக்குள் 36 இடங்களை குறிவைத்து தாக்குவதற்காக பாகிஸ்தான் செலுத்திய 300 இற்கும் மேற்பட்ட ட்ரோன்களை இந்திய இராணுவம் வெற்றிகரமாக அழித்ததாக கர்னல் சோபியா குரேஷி விவரித்துள்ளார்.

‘ஒபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிந்தைய பாகிஸ்தான் இராணுவத்தின் வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு டில்லியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் பங்கேற்று கடந்த 7 ஆம் திகதி பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்தும், அதற்கு இந்திய இராணுவம் அளித்து வரும் பதிலடி குறித்தும் விளக்கம் அளித்தனர்.

இதுதொடர்பில் கர்னல் சோபியா குரேஷி கூறும்போது, மே 7 மற்றும் 8 ஆம் திகதி ரவு, இந்திய இராணுவ உள்கட்டமைப்பை குறிவைக்கும் நோக்கில், மேற்கு எல்லை முழுவதும் இந்திய வான்வெளியை பல முறை அத்துமீறி பாகிஸ்தான் இராணுவம் தாக்கியது.

இது மட்டுமல்லாமல், கட்டுப்பாட்டுக் கோட்டில் கனரக ஆயுதங்களையும் பாகிஸ்தான் ராணுவம் ஏவியது. 36 இடங்களை தாக்க முயற்சிப்பதற்காக சுமார் 300 முதல் 400 ட்ரோன்களை பாகிஸ்தான் இராணுவம் பயன்படுத்தியது.

இந்திய ஆயுதப் படைகள் இயக்கவியல் மற்றும் இயக்கவியல் அல்லாத வழிமுறைகளைப் பயன்படுத்தி இந்த ட்ரோன்களில் பலவற்றை சுட்டு வீழ்த்தின.

இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சோதிக்கும் நோக்கிலும், உளவுத் தகவல்களை சேகரிக்கும் நோக்கிலும் பாகிஸ்தான் இத்தகைய பெரிய அளவிலான வான்வழி ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்களின் உடைந்த பாகங்கள் குறித்து தடயவியல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆரம்ப அறிக்கைகளின்படி, அவை துருக்கி நாட்டின் அசிஸ்கார்டு சோங்கர் ட்ரோன்கள் என்பது தெரிய வந்துள்ளது என தெரிவித்தார்.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்