தேர்தலில் வென்றவர்களும் கதிரையில் அமர முடியாத நிலை

14 வைகாசி 2025 புதன் 12:12 | பார்வைகள் : 162
கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக போட்டியிட்ட அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ள கருத்துக்களைப் பார்க்கும் போது, சகல கட்சிகளும் வெற்றியடைந்துள்ளதாகவே தெரிகிறது.
தேர்தல் நடைபெற்ற 339 உள்ளூராட்சி மன்றங்களில் 266 மன்றங்களில் முதலிடத்தையும் 133 மன்றங்களில் அருதிப் பெரும்பான்மையையும் வென்ற தேசிய மக்கள் சக்தி அச்சாதனைகளைக் காட்டி தாமே வெற்றியாளன் என்கிறது.
ஜனாதிபதித் தேர்தலில் தாம் பெற்றதைப் பார்க்கிலும், பத்து இலட்சம் வாக்குகளையும் பொதுத் தேர்தலில் பெற்றதைப் பார்க்கிலும், 23 இலட்சம் வாக்குகளையும் இம்முறை தாம் இழந்துள்ளதை அக்கட்சி பொருட்படுத்தவில்லை போலும்.
பொதுத் தேர்தலில் தாம் பெற்றதைப் பார்க்கிலும், இம்முறை மூன்று இலட்சம் வாக்குகள் அதிகரித்துள்ளதாகவும் அது ஐந்து வீத அதிகரிப்பாகும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் மார்தட்டிக் கொள்கின்றனர்.
தமது கட்சி நாட்டில் எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திலும் அருதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதை அவர்கள் பேச விரும்பவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் பெற்றதைப் பாரக்கிலும், பத்து இலட்சம் வாக்குகளைக் குறைவாகவே தமது கட்சி பெற்றுள்ளது என்பதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.
கடந்த பொதுத் தேர்தலின் போது, சுமார் 350,000 வாக்குகளை, அதாவது 3 வீத வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இம்முறை தமது வாக்குகளை 950,000 ஆகவும் விகிதாசாரத்தை மூன்றிலிருந்து ஒன்பது வரையிலும் அதிகரித்துக் கொண்டுள்ளது. அதை அக்கட்சியின் தலைவர்கள் பெரும் சாதனையாக எடுத்துரைக்கின்றனர்.
தமது கட்சி கடந்த கலத்தில் இரண்டு பொதுத் தேர்தல்களில் பாராளுமன்றத்தில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற கட்சி என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கவும் விரும்பவில்லை.
ஐக்கிய தேசிய கட்சி இச்சந்தர்ப்பத்தில் மௌனமாக இருக்கவே விரும்புகிறது போலும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 22 இலட்சம் வாக்குகளைப் பெற்ற அக்கட்சி அடுத்து வந்த பொதுத்தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்திலும் யானை சின்னத்திலும் போட்டியிட்டு
566,000 வாக்குகளையே பெற்றது. இம்முறை அதுவும் குறைந்து 488,000 வாக்குகளையே அக்கட்சி பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆகியவற்றின் போது, வாக்காளர்களின் தேர்வுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் வேறுபடுகின்றன.
எனவே, ஒரு கட்சி இவற்றில் ஒரு தேர்தலில் அடைந்த வெற்றியையோ தோல்வியையோ மற்றொரு தேர்தலில் அக்கட்சி பெற்ற வெற்றி தோல்வியோடு ஒப்பிடுவது அவ்வளவு பொருத்தமாகாது.
எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தி கடந்த சில மாதங்களில் இழந்த வாக்குகளின் பாரதூரத் தன்மையை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது.தாம் 266 சபைகளில் முதலிடத்தை அடைந்தோம் என்றோ 133 சபைகளில் அருதிப் பெரும்பான்மையைப் பெற்றோம் என்றோ ஏனைய கட்சிகள் எங்கும் அருதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை என்றோ கூறி, அக்கட்சி தாம் அடைந்த பின்னடைவை மூடி மறைக்க முடியாது.
இந்த பின்னடைவுக்குத் தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணங்களும் அக்கட்சியின் குறைபாடுகளும் இருப்பதைக் காணலாம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, ஆசன பகிர்வு கலப்பு தேர்தல் முறையின் கீழ் நடைபெற்றாலும், தொகுதி வாரியாகவே தேர்தல் நடைபெறுகிறது.
எனவே, இத்தேர்தல்களின் போது, தொகுதி வாரியாக போட்டியிடும் தனித்தனி வேட்பாளர்களின் செல்வாக்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.அனேகமாகத் தேசிய மக்கள் சக்தியின் தொகுதிவாரி வேட்பாளர்களைப் பார்க்கிலும், ஏனைய பிரதான கட்சிகளின் வேட்பாளர்களின் செல்வாக்கு அதிகமாகும், ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பிரதேசத்தில் செல்வந்தர்களாக அல்லது உயர்குடிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
இது தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகள் குறைய ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் வெற்றி பெறுவதற்குப் பிரதான காரணம் 2021இல் ஆரம்பித்த பொருளாதார நெருக்கடியினால் வாக்காளர்கள் மரபு ரீதியாக சிந்திப்பதைக் கைவிட்டு புதிதாகச் சிந்திக்க முற்பட்டமையேயாகும்.
பொருளாதார நெருக்கடியின் விளைவாக விரக்தியடைந்த மக்கள் அது வரை நாட்டை ஆட்சி புரிந்த கட்சிகளையும் அவற்றின் பிரதான ஆதரவு சக்திகளையும் நிராகரித்து மிகுதியாக இருந்த கட்சிகளில் முன்னணியில் இருந்த தேசிய மக்கள் சக்தியைத் தெரிவு செய்தனர்.
அவ்வாறு செய்த மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது பொருளாதார பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அது நடைபெறவில்லை. அதற்கு நியாயமான காரணங்களைப் போலவே அக்கட்சியின் குறைபாடுகளும் ஏதுவாயின.
அரசியல்வாதிகளிடம் எவ்வளவு நல்ல திட்டங்கள் இருந்த போதிலும், அதிகாரிகள் மூலமாகவே அவர்கள் அவற்றை நிறைவேற்ற வேண்டும். ஆயினும், அரச இயந்திரத்தை ஆட்கொண்டிருக்கும் அதிகாரிகள் அதற்குத் தயாராக இல்லை.
பல பிரச்சினைகள்
அரச துறையின் ஊழல், செயல்திறனின்மை மற்றும் வீண் விரயம் போன்ற காரணங்களாலேயே உருவாகியிருக்கின்றன, தீர்க்கப்படாமல் இருக்கின்றன.
உதாரணமாக, விலைவாசியோடு அரச அதிகாரிகளின் ஊழலும் சம்பந்தப்பட்டுள்ளது. அவர்கள் சந்தைக் காரணிகளை முறையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில்லை. அவர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையே தொடர்புகள் இருக்கின்றன.
முன்னைய ஆட்சியாளர்களோடு கைகோர்த்து செயற்பட்ட அதிகாரிகள், அரசாங்கத்தின் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல தயாராக இல்லை என்று அமைச்சர்களான லால் காந்த மற்றும் சுனில் ஹந்துன்னெத்தி அகியோர் கடந்த டிசெம்பர் மாதம் கூறியிருந்தனர்.
இதுவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமிருந்து சிறிதளவாயினும் மக்களை அந்நியப்படுத்தக் காரணமாக அமைந்திருக்கலாம்.அதேபோல, இலங்கையின் பொருளாதாரம் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டமொன்றின் கீழ், இயங்கி வருகிறது.
உண்மையில் அந்நிதியமே நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் அரசாங்கம் மின் கட்டணத்தைக் குறைத்தது. அது பிழையென்றும் மின் கட்டணத்தை மின்சார சபையின் செலவுக்கேற்ப மீண்டும் அதிகரிக்க வேண்டும் என்றும் அந்நிதியம் இப்போது கூறுகிறது.
சிலவேளை, நிதியத்தின் கடனில்; அடுத்த தவணைத் தொகை அதனடிப்படையில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.இந்த நிலையில், நாணய நிதியத்தின் அனுமதியின்றி மக்களுக்கு சலுகை வழங்க அரசாங்கத்தால் முடியாத நிலைமையே நிலவுகிறது.
நாட்டை பொறுத்தவரை அது சரியானதாக இருக்கலாம். ஆனால், மக்கள் அதனை பொருட்படுத்தவில்லை. எனவே, அந்தந்த துறையைச் சேர்ந்தவர்கள் பல்வேறு சலுகைகளைக் கேட்கிறார்கள். அரசாங்கத்தால் அக்கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது.
அதுவும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்குக் குறைய காரணமாக அமைந்திருக்கலாம்.
தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. சில கட்சிகள் நேர்மையாகவே வாக்குறுதிகளை வழங்கலாம். ஆனால், தாம் பதவிக்கு வந்து எவ்வளவு காலத்தில் அவற்றை நிறைவேற்றுவோம் என்று அக்கட்சிகள் கூறுவதில்லை.
அதேவேளை, அக்கட்சிகள் எதிர்பாராத நிலைமைகளும் ஏற்பட்டு வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற முடியாமல் போகலாம். இது போன்ற நிலைமைகளை ஒரு கட்சி தேர்தலுக்கு முன்னர் அறிந்திருந்தாலும், அனுமானித்து இருந்தாலும் அதனைத் தேர்தல் பிரசார மேடையில் கூறி வாக்குகளைப் பெற முடியாது.
ஆனால், மக்கள் தாம் வாக்களித்து பதவியில் அமர்த்திய கட்சி பதவிக்கு வந்தவுடன் தமது பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அந்த வேகத்தில் காரியங்கள் இடம்பெறாவிட்டால், அவர்களது மனதில் சந்தேகம் எழுகிறது. இது வரை பதவியில் இருந்த அரசாங்கங்கள் தம்மை ஏமாற்றிய வரலாற்றை அவர்களால் மறக்கவும் முடியாது.
எதிர்க்கட்சிகளும் மக்களை உசுப்பேற்றும். இதுவும் தேசிய மக்கள் சக்தி இம்முறை தேர்தலில் சந்தித்த பிரச்சினையாகும்.தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் அக்கட்சி இம்முறை பொதுத் தேர்தலை போல் பெரிதாக ஆதரவு பெறவில்லை. தமிழர்கள் தமிழர்களுக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்று வடக்கில் சில கட்சிகளால் மேற்கொள்ளப்பட்ட பிரசாரம் அதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.
இப்போது தேசிய மக்கள் சக்தியைப் பார்க்கிலும், ஏனைய கட்சிகளே, குறிப்பாக, தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் தாம் முதலிடத்துக்கு வந்த சபைகளில் அருதிப் பெரும்பான்மையில்லாமையால் அச்சபைகளின் நிர்வாகத்தை நடத்த முடியாத நிலையை எதிர்நோக்கியிருக்கின்றன. இதற்கு 2012ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான கலப்புத் தேர்தல் முறையே காரணமாகும்.
2018ஆம் ஆண்டே கலப்புத் தேர்தல் முறை முதன்முதலில் நடைமுறையில் பரீட்சித்து பார்க்கப்பட்டது. அத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 340 உள்ளூராட்சி மன்றங்களில் 231 மன்றங்களில் முதலிடத்துக்கு வந்த போதிலும் அக்கட்சியும் பல சபைகளில் அருதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை.
எனவே அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இத்தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்றார்.
அத்துடன், இத்தேர்தல் முறையினால் சுமார் 4,000 ஆக இருந்த உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000க்கும் மேலாக அதிகரித்தது. இது அர்த்தமற்ற வீண் விரயமாகும். எனவே, மற்றொரு தேர்தல் வருமுன் இத்தேர்தல முறை திருத்தப்பட வேண்டும்.
நன்றி tamilmirror