பாசப் போராட்டத்தில் ஜெயித்தாரா சூரி?

16 வைகாசி 2025 வெள்ளி 18:57 | பார்வைகள் : 197
திருச்சியில் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் சூரி. அவருடைய ஒரே அக்கா சுவாசிகா, திருமணம் ஆகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்து வருகிறார். இதனால் அவரின் கணவர் பாபா பாஸ்கரின் அம்மா முதல் உறவினர்கள் வரை அனைவரும் மலடி என பேசுகின்றனர். அவர்களின் அத்தனை ஏளனத்திற்கும் அரணாக சூரி இருப்பதுடன், அக்கா மீது மிகுந்த பாசத்தை பொழிகிறார். இந்த சூழ்நிலையில் அக்கா கர்ப்பம் ஆகிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சி அடைகிறது. அக்காவின் மருத்துவ பரிசோதனைக்காக டாக்டரிடம் சென்ற போது அங்கு உதவி டாக்டராக இருந்த ஐஸ்வர்யா லட்சுமி, சூரியின் பாசத்தை பார்த்து அவர் மீது காதல் கொள்கிறார்.
அக்காவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தாய் மாமனான சூரி குழந்தையை அதிக பாசம் காட்டி வளர்க்கிறார். அக்கா, மாமாவை விட குழந்தை எப்போதும் சூரியுடனே இருக்கிறது. குழந்தையும் வளர்கிறது. இவர்களின் காதலும் வளர்கிறது. அதே ஊரில் மிகுந்த மதிப்போடு வாழ்ந்து வரும் ராஜ்கிரண், விஜி சந்திரசேகர் தம்பதிக்கு குழந்தைகள் கிடையாது. சூரியும், சுவாசிகாவும் தான் அவர்களை பார்த்துக் கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து சூரிக்கும், ஐஸ்வர்யா லட்சுமிக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர்.
கல்யாணத்தில் தாலி கட்டுவதில் தொடங்கி முதலிரவு வரை இவர்கள் இருவருக்கும் இடையில் சிறுவன் இருக்கிறான். இதே நிலை சில நாட்கள் தொடர்கிறது. அதோடு இவர்கள் ஹனிமூன் செல்ல புறப்படும் போது அவனும் உடன் வருவேன் என சொல்வதால் இவர்களின் ஹனிமூன் பிளான் டிராப் ஆகிறது. இதனால் ஐஸ்வர்யா லட்சுமிக்கு கோபம் வந்து சூரி உடன் சண்டை போடுகிறார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த விஷயம் பெரிதாக வெடித்து சூரியை விட்டு ஐஸ்வர்யா லட்சுமி பிரிகிறார். அதன்பிறகு என்ன நடந்தது? சூரி-குழந்தையை விட்டு பிரிந்தாரா? இல்லையா? அக்காவிற்கும், மனைவிக்குமான பிரச்சனை தீர்ந்ததா? என்பதே படத்தின் மீதி கதை.
தோப்பாக இருந்த குடும்பங்கள் இன்று தனி மரமாக மாறிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் குடும்ப பாசம், அக்கா-தம்பி உறவு, மாமன்-மாப்பிள்ளை பிணைப்பு என இன்றைய 2கே தலைமுறை பார்த்திடாத, அனுபவிக்காத குடும்பத்தை திரையில் காட்டி ஆனந்த கண்ணீர் வர வைத்துள்ளார் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ். எவ்வளவுதான் காலம் மாறினாலும் நாகரிகம் மாறினாலும் எமோஷன் என்பது அனைவருக்கும் ஒன்றுதான் என்பதை அழகாக திரை மொழியில் காட்டியிருக்கிறார்.
ராஜ்கிரண், விஜி சந்திரசேகர் தம்பதி மூலம் கணவன் - மனைவி இடையிலான ஒற்றுமையையும் புரிதலையும் காட்டி இதயத்தை கனக்க வைக்கிறார். சூரி - சுவாசிகா மூலம் அக்கா தம்பி பாசத்தை சொல்லி இதுபோல் நமக்கு இல்லையே என ஏங்க வைக்கிறார். இவற்றோடு தாயோடு சேர்ந்த தொப்புள் கொடி உறவான தாய்மாமன் - மருமகன் பாசத்தை காட்டி சூரியை தாயுமானவனாக மாற வைக்கிறார். சூரி சொன்ன அழகான கதைக்கு அற்புதமான திரைக்கதை எழுதி திரையில் ஒரு குடும்பத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.
கதை நாயகனாக நடித்துள்ள சூரி, இன்பா என்ற கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். அவருடைய நடிப்பு மற்றும் உடல் மொழி அந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி உள்ளது. ஐஸ்வர்யா லட்சுமி உடன் ரொமான்ஸ் காட்சிகளிலும் சூரி ஸ்கோர் செய்திருக்கிறார். படத்திற்கு படம் அவருடைய ஆக்டிங் ஸ்கில் ஏறிக்கொண்டே இருக்கிறது. அவரோடு போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. சூரிக்கு ஜோடியா எனக் கேட்காமல் அந்த கேரக்டருக்கு பக்காவாக பொருந்தி இருக்கிறார்.
அக்காவாக நடித்துள்ள சுவாசிகா திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பாசமலராக தெரிகிறார். இந்த கதையின் ஆணிவேர் என்றால் ராஜ்கிரண், விஜி சந்திரசேகர் பாத்திரங்கள் தான். அவர்களின் அனுபவ நடிப்பு படத்திற்கு வேறு ஒரு எலிவேஷன் கொடுக்கிறது.
சூரி படத்தில் காமெடி இல்லையே என பீல் பண்ண கூடாது என்பதற்காக அவ்வப்போது பால சரவணன் சிரிக்க வைக்கிறார். இதில் பாசமும், எமோஷனும் போட்டி போடுவதால் நகைச்சுவை தேவையில்லாமல் போயிற்று.
அம்மாவாக வரும் கீதா கைலாசம், அக்கா கணவராக வரும் பாபா பாஸ்கர் ஆகியோர் கிடைக்கும் இடத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். இவர்களோடு ஜெயபிரகாஷும் தனியாக தெரிகிறார். மாஸ்டர் ப்ரீத் சிவன் லட்டு மாதிரி இருந்து நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின் மகன் என்பதால் அப்பாவை விட அதிகமாக தாண்டி இருக்கிறார்.
படத்திற்கு தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. ஹேஷம் அப்துல் வஹாப் இசையில் பாடல்கள் நெஞ்சை வருடுகின்றன. பின்னணி இசை மூலம் கண்ணீர் வர வைக்கிறார்.
பேய் படங்கள், திரில்லர் படங்கள் ஆக்ஷன் படங்கள் என பார்த்து பார்த்து சலித்த ரசிகர்களுக்கு பாசமலரை திரையில் காட்டி இருப்பது ரசிக்கும் படியாக உள்ளது. படத்தில் நடிகர்களை விட, பாசமும் எமோஷனும் போட்டி போட்டு நடித்துள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல. படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களை திரையில் கனெக்ட் கொள்ள முடியும். இவ்வளவு இருந்தாலும் சென்டிமென்ட் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆக பல காட்சிகளில் தெரிகிறது.
ஒரு பெரிய காட்சியில் ரசிகர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வர வைத்த இயக்குனர் அதிலிருந்து மீள்வதற்குள் அடுத்தடுத்த காட்சிகளிலும் அதே எமோஷனை கடத்தி இருப்பது படம் பார்ப்பவர்கள் மனதை கொஞ்சம் பிசைகிறது. காட்சிகளுக்கிடையே கொஞ்சம் ப்ரீத்திங் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.