பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதத்தால் இந்தியாவுக்கு கடுமையான பாதிப்பு : ஓவைஸி காட்டம்

18 வைகாசி 2025 ஞாயிறு 17:30 | பார்வைகள் : 105
பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதத்தால் இந்தியா மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, என ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி கூறியுள்ளார்.
கண்டனம்
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அதற்கு காரணமான பாகிஸ்தானை ஓவைஸி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்நாட்டின் செயலை உலகிற்கு எடுத்துக்கூறுவதுடன், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
எம்.பி.,க்கள் குழு
பயங்கரவாதத்தை ஆதரித்து, இந்தியாவுக்கு எதிராக தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் நிலையை உலகிற்கு எடுத்துச் சொல்ல எம்.பி.,க்கள் கொண்ட குழுவை பிரதமர் மோடி அமைக்க உள்ளார். இக்குழுவினர் உலகின் பல நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.
படுகொலை
இந்நிலையில் அசாதுதீன் ஓவைஸி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் நீண்ட காலமாக தூண்டிவிடப்படும் பயங்கரவாதம், மனிதநேயத்திற்கு அச்சுறுத்தலாக மாறி உள்ளது. இந்த செய்தியை எம்.பி.,க்கள் குழுவினர் உலக நாடுகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதம் காரணமாக இந்தியா மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் ஜியா உல் ஹக் ஆட்சிக்காலம் முதல் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை பார்த்து வருகிறோம்.
பாக்.,கின் நோக்கம்
இந்தியாவுக்கு எதிரான மோதலில், பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக தன்னை காட்டிக் கொள்வது முட்டாள்த்தனமானது. இந்தியாவில் 20 கோடி முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இது குறித்தும் உலக நாடுகளிடம் தெரிவிக்க வேண்டும்.
இந்தியாவில் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையை உருவாக்குவது, வகுப்புவாதப் பிளவை தூண்டுவது மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடுப்பது ஆகியவை பாகிஸ்தானின் எழுதப்படாத சித்தாந்தத்தின் ஒரு பகுதியாகும். இதுவே, பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்தின் நோக்கமாக இருந்து வருகிறது.
அச்சுறுத்தல்
1947 முதல் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை அனுப்பி வருகிறது. இதனை அவர்கள் தொடரத்தான் செய்வார்கள். நிறுத்தப்போவது கிடையாது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் காரணமாக, இந்தியாவின் பொறுமையை இழந்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு தேவையான ஆயுதங்கள், பயிற்சி மற்றும் நிதியுதவி அளிக்கும் பாகிஸ்தான், மனித நேயத்திற்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இவ்வாறு ஓவைஸி கூறினார்.