வாடகை மகிழுந்து சாரதிகள் ஆர்ப்பாட்டம்..! - வீதி முடக்கம்!!

18 வைகாசி 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 196
வாடகை மகிழுந்து சாரதிகள் பரிஸ் உட்பட பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். வீதிகளில் மகிழுந்துகளை மெதுவாகச் செலுத்தி போக்குவரத்து தடையினை ஏற்படுத்த உள்ளனர்.
மே 19, நாளை திங்கட்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. பிரான்சுக்கான வாடகை மகிழுந்து (taxi) சம்மேளனம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. சுகாதார காப்புறுதி நிறுவனத்தில் (l'Assurance maladie) இருந்து செலவீனத்தைக் குறைக்க, நோயாளர்களை ஏற்றிச் செல்லும் வாடகை மகிழுந்துகளுக்கான கட்டணத்தை குறைவாக அறவிடுவது தொடர்பில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இவ்வருடம் ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது.
அதை அடுத்தே இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. நாளை திங்கட்கிழமை காலை 7 மணியில் இருந்து பல்வேறு நகரங்களில் வீதி முடக்கம் இடம்பெற உள்ளது.
பிரெஞ்சு சுகாதார காப்புறுதி நிறுவனம் நோயாளர் போக்குவரத்துக்காக சென்ற 2024 ஆம் ஆண்டில் €6.74 பில்லியன் யூரோக்கள் செலவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.