ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள்: வாங்க மத்திய அரசு அனுமதி

18 வைகாசி 2025 ஞாயிறு 14:00 | பார்வைகள் : 132
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து ஆயுதப்படையினருக்கு ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அவசர கால கொள்முதல் அதிகாரத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: அவசரகால கொள்முதல் அதிகாரத்தின் கீழ் பாதுகாப்பு படையினருக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. இதன் கீழ் கண்காணிப்பு ட்ரோன்கள், தற்கொலை ட்ரோன்கள், பீரங்கிகளுக்கு தேவையான வெடிமருந்துகள், ராக்கெட்கள், வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவை வாங்கப்பட உள்ளன. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இவை வாங்கப்பட உள்ளன.
கடந்த ஐந்தாண்டுகளில், ஐந்தாவது முறையாக அவசரகால கொள்முதல் அதிகாரத்தை பயன்படுத்தி ஆயுதங்கள் வாங்கப்பட உள்ளன.பாகிஸ்தானுக்கு எதிரான மோதலின் போது பிரமோஸ் உள்ளிட்ட ஏராளமான ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இதனையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவை ஆயுதப்படைகளை செயல்படுத்த உள்ளன. அவர்களுக்கு பாதுகாப்புப்படை நிதி குழுவினர் அறிவுரை வழங்குவார்கள்.இது தொடர்பாக பொதுத்துறை மற்றும் தனியார் துறையினருடன் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள இலக்குகளை தாக்க பயன்படுத்தப்பட்ட ரேம்பேஜ் ஏவுகணைகள் தற்போது வாங்கப்பட உள்ளன. முன்பு இந்த ஏவுகணைகளுக்காக ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளது. மேலும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை நேரில் கண்காணித்த ஹெரோன் மார்க் 2 டுரோன்களும் வாங்கப்பட உள்ளன.
டுரோன்களை கண்டுபிடிப்பதற்கான ரேடார்கள் தொடர்பான ஒப்பந்தத்தை பொதுத்துறை நிறுவனமான பெல் -க்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.உள்நாட்டில் டுரோன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் ஒப்பந்தங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.