பிரான்ஸ் - இத்தாலியை இணைக்கும் Mont Blanc சுரங்கம் மூடப்படுகிறது!!

20 வைகாசி 2025 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 1031
வெள்ளை மலை என அழைக்கப்படும் ஆல்ப்சின் Mont Blanc மலையினைக் குடைந்து உருவாக்கப்பட்ட பிரான்ஸ்-இத்தாலி நாடுகளை இணைக்கும் சுரங்கப்பாதை ( tunnel du Mont-Blanc) மூன்றரை மாதங்களுக்கு மூடப்பட உள்ளது.
செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 12 ஆம் திகதி வரை சுரங்கத்தின் இரு பக்க போக்குவரத்துக்களும் முற்று முழுதாக மூடப்பட உள்ளது. குறித்த பாதையினை பராமரிக்கும் d'Autoroutes et Tunnel du Mont-Blanc நிறுவனம் நேற்று மே 19, திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த 15 வாரங்களுக்கும் சுரங்கத்தின் திருத்தப்பணிகள் இடம்பெற உள்ளன. இந்த திகதி Haute-Savoie மாவட்ட அதிகாரிகளுடனும், இத்தாலியின் Aosta Valley மாவட்ட அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்து எடுக்கப்பட்டதாகவும், குறித்த நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவாக இருக்கும் என்பதால் அதனை தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த திருத்தப்பணிகளுக்காக €50 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.