Paristamil Navigation Paristamil advert login

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

21 வைகாசி 2025 புதன் 08:07 | பார்வைகள் : 146


உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: ஆரோக்கியமான எதிர்காலம் என்பது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், ஒருங்கிணைந்த தொலைநோக்கு மற்றும் ஒத்துழைப்பை பொறுத்து அமையும். உலகின் மிகப்பெரிய காப்பீட்டு திட்டமான 'ஆயுஷ்மான் பாரத் ' இந்தியாவில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 58 கோடி பேர் பயன் பெறுகின்றனர். தற்போது, இந்த திட்டத்தின் கீழ் 70 வயதுக்கும் மேற்பட்டவர்களையும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான சுகாதார மையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அங்கு பரிசோதனை செய்வதுடன், புற்றுநோய், நீரிழிவு மற்றும் மன அழுத்தம் உள்ளிட்டவை ஆரம்ப நிலையில் கண்டறியப்படுகின்றன.


கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகளை கண்டறிய டிஜிட்டல் தளம் உள்ளது. லட்சக்கணக்கான மக்களுக்கு டிஜிட்டல் சுகாதார அடையாளம் கிடைத்து உள்ளது. இதன் மூலம், ஒருங்கிணைந்த பலன்கள், காப்பீடு, ஆவணங்கள் மற்றும் தகவல்களை பெற உதவுகிறது.

டெலிமெடிசன் மூலம், யாரும் டாக்டரிடம் இருந்து வெகுதொலைவில் இல்லை. நமது இலவச டெலிமெடிசன் சேவை மூலம்340 கோடி ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன.

பாதிக்கப்படும் மக்களை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதை பொறுத்து தான் உலகின் நலன் அமைகிறது. உலகின் தெற்கு பகுதி நாடுகள், சுகாதார சவால்களால் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் அணுகுமுறை பிரதிபலிக்கக்கூடிய, அளவிடக்கூடிய மற்றும் நிலையான மாதிரிகளை வழங்குகிறது.

ஜூன் 11ல் சர்வதேச யோகா தினம் வருகிறது. இந்த ஆண்டு யோகா தின கொண்டாட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்து நாடுகளையும் வரவேற்கிறேன். ஒரே பூமி ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா என்ற மையக்கருத்து அடிப்படையில் இந்தாண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள பொது மருந்தகங்கள், தரமான மருந்துகளை சந்தையை காட்டிலும் குறைந்த விலையில் விற்பனை செய்கின்றன. இதன் மூலம் அத்தியாவசிய மருந்துகள் அனைவருக்கும் கிடைக்கிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்