ஐபிஎல் போட்டியில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய விதி - அநீதி இழைக்கப்பட்டதாக கொதிக்கும் KKR

21 வைகாசி 2025 புதன் 14:00 | பார்வைகள் : 381
2025 ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது பெங்களூரு, பஞ்சாப், குஜராத் ஆகிய 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இன்று நடைபெற உள்ள மும்பை மற்றும் டெல்லி அணிக்கு இடையேயான போட்டியின் முடிவில் பிளே ஆஃப் செல்லும் 4வது அணியும் உறுதி செய்யப்பட்டு விடும்.
கடந்த மே 17 அன்று பெங்களூருவில் நடந்த RCB மற்றும் KKR அணிக்கு இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதன் காரணமாக KKR அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. RCB அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
பெங்களூரு உட்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மழை பெய்து வருவதால், சில ஐபிஎல் போட்டிகள் ரத்தாகும் சூழல் நிலவுகிறது.
இதன் காரணமாக, வரும் 23ம் திகதி நடைபெற இருந்த பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், போட்டிகள் மழை காரணமாக ரத்தாவதை தடுக்கும் வகையில், ஐபிஎல் தொடரில் புதிய விதி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக ஐபிஎல் போட்டிக்கு வழங்கப்படும் நேரத்தை விட, கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது.
பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டிக்கு மட்டுமே இவ்வாறு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது லீக் போட்டிகளுக்கும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதி தாமதமாக அமல்படுத்தப்பட்டுள்ளதாக, KKR அணி CEO Venky mysore, ஐபிஎல் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கிய போது, KKR மற்றும் RCB அணிக்கு இடையேயான போட்டி மழையால் பாதிக்கப்படும் சூழல் இருந்தது.
இந்த விதி அப்போதே அமல்படுத்தப்பட்டிருந்தால் போட்டியின் முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஐபிஎல் நிர்வாகத்தின் முடிவுகள் சீரான முறையில் இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
.