இலங்கையில் ஆடை உற்பத்தி தொழிற்சாலை மூடல் - 1,400 பணியாளர்கள் நிர்க்கதி

21 வைகாசி 2025 புதன் 15:00 | பார்வைகள் : 282
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள நெக்ஸ்ட் என்ற ஆடை உற்பத்தி தொழிற்சாலை மூடப்பட்டமையினால் அங்குப் பணியாற்றிய 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.
உற்பத்தி செலவுகளை ஈடுசெய்ய முடியாமையால் குறித்த தொழிற்சாலையை மூடுவதற்கு அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த தொழிற்சாலை, ஒரு பிரித்தானிய முதலீட்டுத் திட்டமாகும். அங்கு உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகள் லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
குறித்த தொழிற்சாலை மூடப்படும் என கடந்த 10 ஆம் திகதி தங்களது தொழிற்சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ், எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ் தெரிவிக்கையில், “உற்பத்தி செலவு அதிகமாகியுள்ளதால் தொழிற்சாலையை நடத்திச் செல்ல முடியாது என அவர்கள் காரணம் தெரிவித்துள்ளனர்.
எனினும், அதனைத் தொழில் ஆணையாளரிடம் அவர்கள் ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமலும், தொழில் ஆணையாளருக்கு அறிவிக்காமலும் குறித்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொழில் ஆணையாளருக்கு முறைப்பாட்டை அளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். முதலீட்டாளர்களுக்கு தங்களது தொழிலை நடத்திச் செல்வதற்கு, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் வசதிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், தங்களால் அங்குத் தொழிலை நடத்திச் செல்ல முடியாது எனக் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர்கள் கூறும் காரணம் நிரூபிக்கப்படுமாயின், அங்குள்ள ஏனைய தொழிற்சாலைகளும் இத்தகைய தீர்மானத்தை எடுக்கக்கூடும் எனவும் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகள் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு வெளியே இயங்குவதுடன், அவை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இயங்குகின்றன.
இதற்கிடையில், மூடப்பட்ட தொழிற்சாலையில் தற்போது பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த தீர்மானத்தினால், அங்குப் பணிபுரிந்த பணியாளர்கள் நிர்க்கதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.