வக்ப் நிலமாக இருந்தாலும் அரசு கைப்பற்றலாம்; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

22 வைகாசி 2025 வியாழன் 08:08 | பார்வைகள் : 280
அரசுக்கு சொந்தமாக இருந்த நிலத்தை வக்ப் நிலமாக அறிவிக்கப்பட்டிருந்தால், அந்த நிலத்தை அரசால் கைப்பற்ற முடியும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளதை சுட்டிக் காட்டிய மத்திய அரசு, அரசு நிலத்தை உரிமை கோர யாருக்கும் உரிமை கிடையாது என தெரிவித்துள்ளது.
வக்ப் போர்டு சொத்து தொடர்பாக பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்திற்கு எதிராக, காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், ஏராளமான முஸ்லிம் அமைப்புகள் என, 100க்கும் அதிகமான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று முதல் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது; அரசு நிலத்தை உரிமை கோர யாருக்கும் உரிமை கிடையாது. அரசுக்கு சொந்தமாக இருந்த நிலத்தை வக்ப் நிலமாக அறிவிக்கப்பட்டிருந்தால், அந்த நிலத்தை அரசு கைப்பற்ற முடியும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பே உள்ளது. வக்ப் என்பது தர்மம் தானே தவிர, இஸ்லாத்தின் ஒரு இன்றியமையாத பகுதியில்லை. இந்து, கிறிஸ்துவம், சீக்கியம் என அனைத்து மதங்களிலும் தர்மம் என்ற ஒரு பகுதி உள்ளது.
அரசு கொண்டு வந்த இந்த வக்ப் சட்டத் திருத்தம் குறித்து அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. கூட்டு பார்லிமென்ட் குழு 36 அமர்வுகளில் இது குறித்து விவாதித்துள்ளன, எனக் கூறினார்.