ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

23 வைகாசி 2025 வெள்ளி 13:14 | பார்வைகள் : 318
நடிகர் ரவி மோகனும் அவரது மனைவி ஆர்த்தியும் சுமார் 17 ஆண்டு திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டு விவாகரத்து பெற்று பிரிய முடிவெடுத்தனர். இவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் தனக்கும் தன் குழந்தைகளுக்கு மாதம் 40 லட்சம் தர வேண்டும் எனக் கோரி இருந்தார் ஆர்த்தி ரவி. இந்த வழக்கில் ரவி மோகன் தரப்பு விளக்கம் அளிக்க கோரி ஜூன் 12ந் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் சூழலில் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி இருவரும் சமூக வலைதளங்களில் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக குற்றம் சாட்டிய வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் ரவி மோகன், தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க ஆர்த்தி மற்றும் அவரது அம்மா சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி சுவாமிநாதன் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரவி மோகன் மற்றும் ஆர்த்தி என இரு தரப்பில் இருந்தும் ஆஜரான மூத்த வக்கீல்கள், இனி இருவரும் மாறி மாறி எந்த கருத்துகளையும் தெரிவிக்க மாட்டோம் என்று உறுதியளித்ததோடு, ஏற்கனவே வெளியிட்ட கருத்துகளை நீக்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் இருவர் குறித்தும் சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இரு தரப்பினரும் இனி அவதூறு கருத்துகளை தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டார். அதே போல் பொது வெளியில் இதற்கு முன்னர் வெளியிட்ட அறிக்கைகளையும் நீக்க வேண்டும் என இருவருக்கும் அறிவுறுத்தினார். மேலும் இவர்களைப் பற்றி விவாதிக்கவோ; செய்திகள் வெளியிடவோ சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.