முகத்தை அடையாளம் காணும் கமராக்கள்... - அவசியம் என்கிறார் அமைச்சர்!!

24 வைகாசி 2025 சனி 07:00 | பார்வைகள் : 868
பெரும் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு விரைவாக கைது செய்ய ‘முகத்தினை அடையாளம் காணும்’ திறன் கமராக்கள் அவசியம் என நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin, நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
முகத்தினை அடையாளம் கமராக்கள் பொருத்துவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கருத்துக்கணிப்புக்களில், பிரெஞ்சு மக்கள் பெரிதளவில் ஆதரவு தெரிவிக்கவில்லை. இருந்தபோதும் அவ்வகை கமராக்களின் அவசியம் குறித்து அரசு தீவிரமாக ஆராய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை காலை நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin இது தொடர்பில் தெரிவிக்கையில், “20 ஆண்டுகளுக்கு முன்னர் கண்காணிப்பு கமராக்கள் அமைக்கப்பட்டபோது அவை விமர்சிக்கப்பட்டன. ஆனால் இன்று அதனையே அனைவரும் வீடுகளில், வியாபார நிலையங்களில் பயன்படுத்தி வருகின்றனர். இன்று நாம் முகத்தினை அடையாளம் காணும் கமராக்களை பொருத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம். அடுத்த 10 ஆண்டுகளில் அவை மிக அவசியமான ஒன்றாக மாறிவிடும்!” என அவர் குறிப்பிட்டார்.
பல ஐரோப்பிய மற்றும் உலக நாடுகள் அவ்வகை கமராக்களுக்கு மாறிவிட்டன. நாமும் விரைவாக அதில் இணைந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
காவல்துறையினர் ட்ரோன் கருவிகளை பயன்படுத்தி கண்காணிப்பில் ஈடுபடுவதற்கான அனுமதியே 2023 ஆம் ஆண்டில் தான் வழங்கப்பட்டது என்பதையும், அதுவே மிக தாமதமான ஒன்று என்பதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.