நபருக்கு 10,000 யூரோ கொடுத்து ஐரோப்பாவுக்குள் சட்டவிரோத நுழைவுகள்!

24 வைகாசி 2025 சனி 16:12 | பார்வைகள் : 732
ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் எகிப்து வழியாக சட்டவிரோதமாக குடியேற செய்த ஒரு மனிதக்கடத்தல் கும்பலை பிரான்ஸ் சட்டவிரோத குடிவரவு தடுப்பு பிரிவு (SDLII) கைது செய்துள்ளனர்.
இந்த குழு ஒரு வருடமாக செயல்பட்டு வந்ததாகவும், 1,600 பேர் வரை கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு 10,000 யூரோக்கள் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.
ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் நால்வர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் போலித்தனம், பணமோசடி, வரி மோசடி, மற்றும் ஒரு தனியார் நிறுவனத்தின் சொத்துக்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தக் குழுவின் நடவடிக்கைகள் பற்றி அமெரிக்க காவல் துறையினரால் பிரான்ஸ் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. விசாரணையில், குழு சமூக சேவை உதவிகள் செய்ததாகக் கூறி குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
இந்தக் குழு 2023 ஜனவரி முதல் 900,000 யூரோக்கள் வரை வருமானம் ஈட்டியதாக நம்பப்படுகிறது.