ஐபோன்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் 25 சதவீத வரி!

24 வைகாசி 2025 சனி 21:27 | பார்வைகள் : 721
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அப்படிச் செய்யாவிட்டால், அப்பிள் நிறுவனத்திற்கு குறைந்தது 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
மே மாத தொடக்கத்தில் அப்பிள் நிறுவனத்தின் நிதி முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, ரிம் குக் (Tim Cook) அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்களில் பெரும்பாலானவை இந்தியாவில் இருந்து வரக்கூடும் எனக் கூறியதை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி இந்த மிரட்டலை வெளியிட்டுள்ளார்.
இந்த திட்டம் "அறிவுக்கூர்மையற்றது" என்று Wedbush நிறுவனத்தின் பகுப்பாய்வாளர் டானியல் ஐவ்ஸ் (Daniel Ives) தெரிவித்துள்ளார். மேலும் தயாரிப்பை மீண்டும் அமெரிக்காவுக்கு கொண்டுவர ஐந்து முதல் பத்து ஆண்டுகள் ஆகலாம் என்றும், இதனால் விலைகள் வெகுவாக உயரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி நேற்றைய தினம் அப்பிள் நிறுவனத்தை எச்சரித்த சில மணி நேரங்களிலேயே, மற்றுமொரு அறிவிப்பில், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்களை அமெரிக்காவில் விற்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் 25% சுங்க வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.