உக்ரைனை சுற்றி வளைத்த 250 டிரோன்கள், 14 பாலிஸ்டிக் ஏவுகணைகள்

25 வைகாசி 2025 ஞாயிறு 03:53 | பார்வைகள் : 180
உக்ரைன் மீதான ரஷ்யாவின் புதிய வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்தத் தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 56 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கீவ் இந்தத் தாக்குதல்களால் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து கீவ் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய கூட்டு வான்வழித் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.
உக்ரைன் விமானப்படை வெளியிட்டுள்ள தகவலின்படி, கீவ்வை குறிவைத்து 250 ஆளில்லா விமானங்கள் (drones) மற்றும் 14 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
இதனால் குடியிருப்பு கட்டிடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டதோடு, குறைந்தது 14 பேர் காயமடைந்துள்ளனர்.
உக்ரைன் விமானப்படை இந்தத் தாக்குதல்களின் போது ஆறு ஏவுகணைகளையும் 245 ஆளில்லா விமானங்களையும் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாகக் கூறியுள்ளது.
இந்த தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது X சமூக வலைத்தளத்தில், "இத்தகைய ஒவ்வொரு தாக்குதலின் போதும், போரை நீட்டிப்பதற்கான காரணம் மாஸ்கோவில் தான் உள்ளது என்பது உலகிற்கு மேலும் உறுதியாகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்கள் நடைபெற்ற அதே வேளையில், இந்த தீவிரமான இரவு நேரத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.