அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; மே 28ல் தீர்ப்பு

25 வைகாசி 2025 ஞாயிறு 08:51 | பார்வைகள் : 167
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், மே 28ல் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது.
கடந்த டிச.,23ம் தேதி, இரவு, 8:00 மணியளவில், சென்னை கிண்டி அண்ணா பல்கலை வளாகத்தில், 19 வயது மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்டார். இது தொடர்பாக, சென்னை கோட்டூர்புரம் மகளிர் போலீசார், அதே பகுதியை சேர்ந்த, தி.மு.க., பிரமுகர் ஞானசேகரன், 37, என்பவரை கைது செய்தனர்.
சம்பவ இடத்தில், ஞானசேகரன் ஒருவரை போனில் தொடர்பு கொண்டு 'சார்' என்று அழைத்து பேசியதாக தகவல் வெளியானது. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய, சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை அல்லிகுளம் வணிக வளாகத்தில் செயல்படும், மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவு அடைந்தது. இந்த வழக்கில், மே 28ல் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது.