Paristamil Navigation Paristamil advert login

கிரீன் டீ குடித்தால் உடல் எடை குறையுமா.?

கிரீன் டீ குடித்தால் உடல் எடை குறையுமா.?

1 சித்திரை 2023 சனி 09:48 | பார்வைகள் : 4439


 தினசரி சூடாக ஒரு கப் கிரீன் டீ குடித்தால் அது நமது உடலுக்கு புத்துணர்ச்சி தருவதாகவும், உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும் என்று பலரும் நம்புகின்றனர். அவ்வாறு கிரீன் டீயுடன் இஞ்சி, தேன், எலுமிச்சை சாறு, மூலிகைகள், பழங்கள் போன்ற பல விதமான உப பொருட்களை சேர்த்தும் கிரீன் டீயை குடிக்கலாம்.

 
ஆனால் உண்மையிலேயே கிரீன் டீ குடிப்பதால் நமது உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகுமா என்று கேட்டால் அது உண்மைதான். ஆனால் கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையுமா என்று கேட்டால் கண்டிப்பாக கிடையாது என்று தான் கூற வேண்டும்.
 
தினமும் கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையும் என்று கூறுவது ஒரு கட்டுக்கதை ஆகும். வெறும் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக பரப்பப்பட்ட ஒரு பொய் என்று கூட இதனை கூறலாம். இதன் மூலம் கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையும் என்று நம்பி நீங்கள் தினமும் கிரீன் டீ குடித்துக் கொண்டிருப்பீர்கள்.
 
சில உணவு வகைகளை நாம் உட்கொள்ளும்போது அவை கொண்டிருக்கும் கலோரிகளை விட அவற்றை செரிமானம் செய்வதற்கு அதிக கலோரிகளை செலவு செய்ய வேண்டியது இருக்கும். இதன் காரணமாக நமது உடல் எடை சிறிதளவு குறைய வாய்ப்புகள் உண்டு ஆனால் இதுவும் ஒரு எல்லை வரை தான் வேலை செய்யும். கிரீன் டீயில் நிறைந்துள்ள ஆன்டிஆக்சிடென்ட்ஸ் மற்றும் பெனோல் ஆகியவை இந்த விளைவை உண்டாக்குகின்றன. ஆனால் தினமும் இரண்டு கப் அளவிற்கு கிரீன் டீ மட்டுமே குடிப்பது உடல் எடையை குறைக்க உதவாது.
 
கிரீன் டீயில் நிறைந்துள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் நமது குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு மிக அதிக அளவில் நாம் க்ரீன் டீயை பருக வேண்டியது இருக்கும். இது நடைமுறைக்கு ஒத்து வராத ஒரு காரியம் ஆகும்.
 
அப்படி என்றால் உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்? அடிப்படையிலேயே உடல் எடையை குறைக்க வேண்டுமெனில், நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளின் அளவை குறைக்க வேண்டும் அல்லது நீங்கள் செலவழிக்கும் சக்தியின் அளவை அதிகரிக்க வேண்டும். இதற்கு நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி உடல் எடையை குறைப்பதற்கு தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
 
கலோரி பற்றாக்குறை : ஒரு நாளைக்கு நீங்கள் செலவழிக்கும் சக்தியின் ஒட்டுமொத்த அளவைவிட, நீங்கள் உட்கொள்ளும் கலோரியின் அளவு குறைவாக இருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் உங்கள் உடலானது உங்கள் உடலில் தேங்கி இருக்கும் அதிக கொழுப்பை எரித்து உடல் எடையை குறைக்க உதவும். மேலும் இதற்காக நீங்கள் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 உங்களது உடலை சுறுசுறுப்பாகவும் இயக்கத்துடனும் வைத்திருக்கும் போது இயற்கையாகவே உடல் அதிக கலோரிகளை எரிக்க துவங்கும்.. யோகாசனம் செய்வது, நடனம், ஜாக்கிங், உடற்பயிற்சி ஆகியவை அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.
 
நாம் உண்ணும் உணவிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியமானது. குறிப்பாக உடல் எடை குறைப்பிற்காக நாம் உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் போது நம் உடலுக்கு தேவையான அளவு ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் நிறைந்துள்ள வகையில் உணவை உட்கொள்ள வேண்டும். இதனால் நீங்கள் குறைவான உணவை உட்கொண்டாலுமே உங்கள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு என்பது ஏற்படாது.
 
கிரீன் டீ குடிப்பதால் கண்டிப்பாக உங்கள் உடல் எடை குறையாது. அதற்கு பதிலாக உங்களது வாழ்க்கை முறையில் மாற்றம் செய்வது, சரியான உணவு பழக்க வழக்கம் ஆகியவற்றின் மூலமே உங்களால் உடல் எடையை குறைக்க முடியும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்