ஆண்களின் வழுக்கைக்கு இது தான் காரணமா ?
14 தை 2023 சனி 09:03 | பார்வைகள் : 7764
ஆண்கள் பலர் இளமையிலேயே வழுக்கையை சந்திக்கின்றர். பலருக்கு தலையில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்யக்கூட சாத்தியம் இல்லாமல் போகிறது. இதனால் பல ஆண்கள் தன்னம்பிக்கையை இழக்கின்றனர். ஆனால் இது எதனால் ஏற்படுகிறது என்கிற காரணத்தை என்றைக்காவது யோசித்திருக்கீர்களா..?
உங்கள் உணவுப்பழத்தால் வழுக்கை வருகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், பலர் தங்களின் உணவுப் பழக்கம் காரணமாகவும் வழுக்கையை சந்திக்கிறார்கள். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், வழுக்கை தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூயார்க் போஸ்ட்டின் அறிக்கையின்படி, சீனாவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், ஒவ்வொரு நாளும் ஒரு கிளாஸ் சோடா, குளிர் பானங்கள், ஸ்போர்ட்ஸ் பானங்கள் மற்றும் பிற இனிப்பு பானங்களை உட்கொள்வது ஆண்களுக்கு வழுக்கை அபாயத்தை 57% அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
குளிர் பானங்கள் மட்டுமின்றி, டீ, காபி குடிப்பதாலும் வழுக்கை வரலாம் என்பது ஆச்சரியமான விஷயம். அதுமட்டுமன்றி, இனிப்பு பானங்களுடன் ஐஸ்க்ரீம், வறுத்த மற்றும் பொறித்த உணவுகளை தினமும் சாப்பிட்டாலும் வழுக்கை வர காரணமாக இருப்பதாகக் கூறுகிறது.
இதற்கு முழுக்க முழுக்க சர்க்கரைதான் காரணம் என்கிறது. அதாவது அதிகப்படியான சர்க்கரை நுகர்வு இன்சுலின் தட்டுப்பாட்டை உருவாக்குகிறது. இதனால் தலைக்கு இரத்த ஓட்டம் சீராக கிடைப்பதில்லை. இரத்த ஓட்டம் சீராக இருந்தால்தான் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். அப்படி இரத்த ஓட்டம் இல்லாதபோது முடியின் வேர்கள் சேதமடைகின்றன. எனவேதான் முடி உதிர்ந்து அந்த இடத்தில் முடி வளர வாய்ப்புகளின்றி போகிறது.
பொதுவாக, 50% ஆண்கள் 50 வயதிற்குப் பிறகே வழுக்கை பிரச்சனையை சந்திக்கிறார்கள். 25% பேர் 21 வயதிற்கு முன்பே வழுக்கையை பிரச்சனையை அனுபவிக்கிறார்கள். இப்படி இளம் வயதிலேயே முடி உதிர்வது ஆரம்பிக்கிறது. பின் திருமண வயதை எட்டும்போது வழுக்கை வந்துவிடுகிறது.
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியில் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட 1,028 ஆண்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களின் உணவு மற்றும் பானங்களின் தரவுகளை சேகரித்த பிறகு, தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டது.
இதனை அடுத்து ஆராய்ச்சியாளர்கள் இந்த அதிர்ச்சியான விஷயங்களை கண்டறிந்துள்ளனர். சிறுவயதிலேயே வழுக்கை வராமல் இருக்க இனிப்பு பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள். சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதன் மூலம், வாழ்நாள் முழுவதும் வழுக்கையை தவிர்க்கலாம்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 63 சதவீதம் பேர் தினமும் குறைந்தது ஒரு சர்க்கரை நிறைந்த பானத்தையாவது குடிக்கிறார்கள். இதன் காரணமாக, வழுக்கை மட்டுமின்றி, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் உணவில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். இதனால் வழுக்கையை மட்டுமல்ல, நாள்பட்ட நோய்களையும் தவிர்க்கலாம்.