அழையா விருந்தாளியாக வந்த நடிகரால் பார்லிமென்ட் நிலைக்குழு கூட்டம் ரத்து

3 ஆடி 2025 வியாழன் 05:30 | பார்வைகள் : 235
பார்லிமென்ட் நிலைக்குழு ஆலோசனைக் கூட்டத் திற்கு, அழைப்பு அனுப்பப் படாமலேயே, நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கேற்க வந்ததாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர் மட்டுமல்லாது, மேதா பட்கர் உள்ளிட்ட சிலரது வருகைக்கு பா.ஜ., - எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கூட்டம் ரத்து செய்யப்பட்ட சம்பவம், பார்லி., வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராமப்புற மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் துறைகளுக்கான பார்லி., நிலைக்குழுவுக்கு காங்கிரஸ் மூத்த எம்.பி.,யான சப்தகிரி சங்கர் உலகா தலைவராக உள்ளார். ஒடிசாவைச் சேர்ந்த இவரது தலைமையிலான நிலைக்குழுவில், பா.ஜ., - காங்., உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
கடந்த, 2013ல் கொண்டுவரப்பட்ட, நிலம் கையகப்படுத்துதல், புனரமைத்தல் மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டம் சரிவர அமல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக, இந்த நிலைக்குழுவின், 29வது ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
காத்திருந்தனர்
இதில் சம்பந்தப்பட்டுள்ள நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
கூட்டம் நடக்கும் அரங்கிற்கு வெளியே, சமூக ஆர்வலர் மேதா பட்கர், நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட, 10 பேர் காத்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தில் பங்கேற்க வந்த பா.ஜ., எம்.பி.,க்கள் இவர்களை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர்.
''இவர்கள் எதற்காக கூட்டத்திற்கு வந்துள்ளனர்? யார் இவர்களை அழைத்தது?'' என, பா.ஜ., மூத்த எம்.பி., புருஷோத்தம் ரூபல்லா கேள்வி எழுப்பினார். இவரோடு சேர்ந்து பா.ஜ., ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.,க்கள் குரல் கொடுக்கவே அரங்கம் சூடானது.
'அழைப்பாளர்களின் பட்டியலை முன்கூட்டியே எங்களுக்கு வழங்காதது ஏன்? மேதா பட்கர், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள், மத்திய அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். இவர்களை அழைக்க முடிவு செய்துவிட்டால், பாகிஸ்தான் பிரதமரையும் கூட அழைப்பீர்களா?' என்றெல்லாம் எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பேசிய குழு தலைவர் சப்தகிரி சங்கர் உலகா, ''யாரை அழைக்க வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே பட்டியல் தயாரிக்கப்பட்டு, அது சபாநாயகர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து ஒப்புதலும் கிடைத்துவிட்டது.
''அதன் பின்னர்தான், இவர்கள் வந்துள்ளனர். இவ்வாறு பொது சமூக பிரதிநிதிகளை அழைப்பதும் அவர்களிடம் கருத்துக்கள் கேட்பதும் வழக்கமான நடைமுறைதான்,'' என்றார்.
ஆனாலும், இவற்றை ஏற்க முடியாது என கூறி, பா.ஜ., உள்ளிட்ட தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் அனை வரும் வெளிநடப்பு செய்வதாக கூறி, கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.
நிலைக்குழுவில் இடம்பெற்றுள்ள, 29 எம்.பி.,க்களில், 14 பேர் மட்டுமே வந்திருந்தனர். இவர்களில், 8 பேர் தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள்.
பெயர் இல்லை
இவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டதால், கூட்டம் நடத்துவதற்கு தேவையான பலம் இல்லாமல் போனது. இதையடுத்து, இந்த ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், 'மேதா பட்கர் உள்ளிட்ட மற்ற அனைவரது பெயர்களும் இடம்பெற்றிருந்த அந்த அதிகாரப்பூர்வ பட்டியலில், நடிகர் பிரகாஷ்ராஜ் பெயர் இடம்பெறவில்லை. அவர் எதற்காக அழைக்கப்பட்டார்.
பின்னணி எதுவென்றே தெரியாத ஒரு நபர் கூறும் கருத்துக்களை, நாங்கள் ஏன் காது கொடுத்துக் கேட்க வேண்டும்' என, பா.ஜ., - எம்.பி.,க்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.