Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா..போலீஸ் ராஜ்யமா? ஐகோர்ட் கேள்வி

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா..போலீஸ் ராஜ்யமா? ஐகோர்ட் கேள்வி

4 ஆடி 2025 வெள்ளி 05:36 | பார்வைகள் : 178


சட்டத்தின்படி செயல்படாமல், நாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற அடிப்படையில் காவல் துறையினர் செயல்படுகின்றனர். தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா அல்லது போலீஸ் ராஜ்யமா?' என, பாலியல் வழக்கு விசாரணையில், காவல் துறைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் சூடான கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னையை சேர்ந்த, 28 வயதான பெண், மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில், கடந்த ஏப்ரலில் புகார் அளித்தார். அப்புகாரில், 'டில்லியில் பணிபுரிந்து வந்தேன். அங்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

'வருமானம் ஈட்டல் மற்றும் ஆதரவற்றவளாக இருப்பதை அறிந்து, திருமணம் செய்து கொள்வதாக கூறினார். திருமணம் செய்து கொள்ளாமல், அவருடன் உடல் ரீதியாக தொடர்பில் இருந்தேன்; கருவுற்றேன்.

ஏமாற்றினார்


'கருவை கலைக்க வற்புறுத்தினார். என் வருமானத்தில், 12 லட்சம் ரூபாய் வரை பெற்று ஏமாற்றியுள்ளார். வேறொரு பெண்ணை திருமணம் செய்வதை அறிந்து நிறுத்தினேன். ஆத்திரமடைந்த அவர், தாயுடன் வீட்டுக்கு வந்து மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இதன்படி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வாலிபருக்கு எதிராக, மயிலாப்பூர் மகளிர் போலீசார், ஏப்ரல் 29ல் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

மனுவில், 'வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர், முன்ஜாமின் கோர திட்டமிட்டு வருகிறார். இருப்பினும், இதுவரை என்னிடம் வாக்குமூலம் பதிவு செய்யவில்லை. போலீசார் இவ்வழக்கை டில்லிக்கு மாற்ற முயற்சிக்கின்றனர்.

'இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை, போலீசார் கைது செய்யாவிட்டால், என் உயிருக்கு அவராலும், அவரது தாயாலும் ஆபத்து ஏற்படலாம். வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் போலீசார் செயல்படுகின்றனர்' என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டிய சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று மாலை 4:00 மணிக்கு, சைதாப்பேட்டை, 18வது மெட்ரோபாலிட்டன் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஆர்.பார்த்திபன் ஆஜரானார்.

என்ன சிக்கல்?


அவரிடம் நீதிபதி, 'பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை ஏன் பதிவு செய்யவில்லை? பதிவு செய்வதில் என்ன சிக்கல் உள்ளது?' என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மாஜிஸ்திரேட், 'சம்மன் அனுப்பிய போதிலும், அதை போலீசார் திருப்பி அளித்து விட்டனர்' என, பதில் அளித்தார்.

இதையடுத்து, போலீசாரின் செயல்பாட்டை கண்டித்து, நீதிபதி பி.வேல்முருகன் கூறியதாவது:

போலீசார் தங்களின் மோசடிக்கு நீதிமன்றத்தையும் உடந்தை ஆக்குகின்றனர். காவல் துறையின் இத்தகைய செயல் கண்டனத்துக்கு உரியது. வாக்குமூலம் பதிவு செய்ய வந்த பாதிக்கப்பட்டவரை ஏன் துன்புறுத்துகிறீர்கள்? குற்றவாளிகளை கூட இவ்வளவு துன்புறுத்தியதில்லை.

குறிப்பிட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தான் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என, எந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது? காவல் துறை இதுகுறித்து விளக்க வேண்டும்.

மன உளைச்சலில் வரும் பாதிக்கப்பட்டவர்களை, அருவருக்கத்தக்க வகையில் காவல் துறையினர் நடத்துகின்றனர்.

சட்டத்தில் கூறியபடி செய்ய மறுத்து, 'தெனாவட்டாக' செயல்படுகின்றனர். சட்டத்தின்படி செயல்படாமல், நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்ற அடிப்படையில், காவல் துறையினர் செயல்படுகின்றனர். இது என்ன போலீஸ் ராஜ்யமா?

இதுபோன்ற செயல்பாடுகள் தொடருமானால், ஒரு கட்டத்தில் காவல் துறையே தேவையில்லை என்ற நிலை உருவாகும். பரவலாக பெருகி விட்ட ஊழல், தற்போது, 99.9 சதவீதமாக உள்ளது. இன்னும் 1 சதவீதம் தான் மீதி; அதையும் எட்டி விட்டால், ஊழலில் 'சென்டம்' பெற்று விடும் நிலை உள்ளது.

அரசும் ஆதரவு?


போலீசின் இதுபோன்ற செயல்பாடுகளால், அரசுக்கு மட்டுமின்றி, நீதிமன்றத்திற்கும் பெரும் தலை வலி ஏற்படுகிறது. அரசும், காவல் துறைக்கு ஆதரவாக இருப்பது துரதிருஷ்டம். இதுபோல் செயல்படும் காவல் துறையினரை பணி நீக்கம் செய்து, உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இவ்வாறு நீதிபதி எச்சரித்தார்.இதையடுத்து, வாக்குமூலம் பதிவுக்காக, சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன், பாதிக்கப்பட்ட பெண்ணை ஆஜர்படுத்த, காவல் துறைக்கு உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்