விமான இன்ஜினை மாற்றாதது ஏன்?: ஏர் இந்தியாவுக்கு டி.ஜி.சி.ஏ., சம்மன்

5 ஆடி 2025 சனி 06:43 | பார்வைகள் : 205
ஏர் இந்தியா'வின் 'ஏர் பஸ் - 320' விமானத்தின் இன்ஜின்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றத்தவறிய அதன் நிர்வாகத்திற்கு, டி.ஜிw.சி.ஏ., விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியது தெரியவந்துள்ளது.
ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில் இயக்கப்பட்ட 'ஏர் பஸ் - 320' என்ற விமானத்தில் இன்ஜினை மாற்றும்படி ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்திஉள்ளது.
எனினும் அவற்றை மாற்றாமல், மாற்றப்பட்டது போல் அந்நிறுவனம் பதிவு செய்துள்ளதை, டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கண்டறிந்து, கடந்த மார்ச்சில் ஏர் இந்தியாவுக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியது தெரியவந்துள்ளது.
இந்த சம்மனில், 'குறிப்பிட்ட கால அளவிற்குள் ஏர் பஸ் - 320 விமானத்தின் இன்ஜினை மாற்றாதது ஏன்? எனினும், மாற்றப்பட்டது போல் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பு?' என, குறிப்பிட்டுள்ளது. இச்சம்மனை தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் அதன் தரக்கட்டுப்பாட்டு மேலாளரை நீக்கியுள்ளது.
இதுபோன்ற இன்ஜின் பராமரிப்பில் மெத்தனமாக செயல்படுவது, மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என, விமான விபத்துகளை விசாரிக்கும் ஆணையத்தின் முன்னாள் தலைவர் விபூதி சிங் குறிப்பிட்டுள்ளார்.