20 ஆண்டுக்கு பின் ஒன்றாக இணையும் தாக்கரே சகோதரர்கள்!

5 ஆடி 2025 சனி 08:43 | பார்வைகள் : 144
மகாராஷ்டிரா அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த உத்தவ் தாக்கரே, அவரது சகோதரர் ராஜ் தாக்கரே இருவரும் இருபது ஆண்டு பகையை மறந்து மும்மொழி கொள்கைக்கு எதிராக இன்று இந்தி எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கின்றனர்.
சிவசேனா கட்சியை தோற்றுவித்த பால் தாக்கரே இவரது மகன் உத்தவ் தாக்கரே. இந்தகட்சியில் செல்வாக்குமிக்க தலைவராக இருந்தவர் ராஜ்தாக்ரே, இவர் பால் தாக்கரேவின் சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன் ஆவார்.
கடந்த 2005ம் ஆண்டு கட்சியில் பால் தாக்கரேவுக்கு அடுத்த வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட மோதலால் ராஜ் தாக்ரே கட்சியை விட்டு வெளியேறி மகாராஷ்டிரா நவநிரமாண் சேனா என்ற பெயரில் தனிக்கட்சி துவக்கி நடத்தி வருகிறார். இரு தரப்பினர் இடையே 20 ஆண்டுகளாக விரோதம் நீடித்து வந்தது. எந்த பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்தனர்.
இந்த சூழலில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பா.ஜ., மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தவ், ராஜ் தாக்கரே இருவரும் இன்று இந்தி எதிர்ப்பு பேரணியை நடத்துகின்றனர்.
மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் இருவரும் பங்கேற்கின்றனர். இவர்கள் ஒன்றிணைவதற்கு தேசிய வாத காங்., தலைவர் சரத்பவார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மராத்தி மொழிக்காக இருபது ஆண்டு பகையை மறந்து ஒன்றிணைகின்றனர்.