த.வெ.க.,வால் தி.மு.க.,விற்கு சவால் இல்லை: கனிமொழி

5 ஆடி 2025 சனி 11:43 | பார்வைகள் : 153
த.வெ.க.,வால் தி.மு.க.,விற்கு சவால் ஏதும் இல்லை. தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்,'' என தி.மு.க., எம்.பி., கனிமொழி கூறியுள்ளார்.
நெல்லையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: த.வெ.க., தனித்து போட்டியிடுவது தி.மு.க.,விற்கு எந்த சவாலாகவும் இருக்காது. அ.தி.மு.க.,விற்கும், த.வெ.க.,விற்கும் இடையேதான் சவால் இருக்கும். நிறைய அரசியல் கட்சிகள் தனித்துப் போட்டியிடுகிறார்கள். தனித்துப் போட்டியிடுவது என்பது அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட முடிவு. அவர்களுக்கு வாழ்த்துகள். ஆனால், வெற்றி தி.மு.க.,விற்குத்தான். தி.மு.க., கூட்டணிக்குத்தான்.
தமிழகம் எப்பொழுதும் ஒரே அணியில் தான் இருக்கிறது. வேறு யாரை கூட்டணியில் இணைப்பது என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார். ஸ்டாலினை முதல்வராக ஏற்றுக்கொண்டு வரும் எந்த அரசியல் கட்சிகளும் எங்களுடன் இணைந்து பணியாற்றலாம்.
சில பேர் விஜயின் இந்த முடிவால் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கலாம். யார் மக்களுடைய எதிரிகள் என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர். மக்கள் யாரை எப்படி பார்க்கிறார்கள் என்பதுதான் முக்கியம். மக்கள் திமுக மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்கள் யாரை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார்கள், யாருக்கு தேர்தலில் வாக்களிப்பார்கள் என்பதுதான் முக்கியமே தவிர, யார் யாரை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வைத்து பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.