Paristamil Navigation Paristamil advert login

தேர்தலுக்கு 8 மாதத்திற்கு முன்னரே தமிழக அரசியல் கட்சிகள்...சுறுசுறுப்பு!

தேர்தலுக்கு 8 மாதத்திற்கு முன்னரே தமிழக அரசியல் கட்சிகள்...சுறுசுறுப்பு!

7 ஆடி 2025 திங்கள் 09:10 | பார்வைகள் : 157


தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில், தற்போதே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை துவக்கி விட்டன. மக்களை கவர, மாநாடு, தலைவர்கள் சுற்றுப்பயணம், ரோடு ேஷா, கூட்டணி பேச்சு என, அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்பாக செயல்பட துவங்கியுள்ளன.

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன், மார்ச்சில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும். அதற்கு எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை துவக்கி உள்ளன.

ஆளுங்கட்சியான தி.மு.க., ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளுடன், பா.ம.க., - தே.மு.தி.க., - எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட கட்சிகளை சேர்க்க ஆலோசனை நடத்தி வருகிறது.

அத்துடன், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் குறைந்தது 30 சதவீதம் பேரை, கட்சியில் உறுப்பினராக சேர்க்க, 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை பணியை துவக்கி உள்ளது.

தி.மு.க.,வினர் வீடு வீடாக சென்று, மக்களை சந்தித்து, ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி, அவர்களை கட்சி உறுப்பினராக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

'மத்திய அரசுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்' எனக்கூறி, மக்களை தங்களுக்கு ஆதரவாக மாற்றும் முயற்சியில் தி.மு.க., ஈடுபட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலினும் மாவட்டங்களுக்கு செல்லும் போது, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்; மக்களை சந்திக்க, 'ரோடு ேஷா' நடத்துகிறார்; கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகளையும் முடுக்கி விடுகிறார்.

பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை துவக்கி உள்ளது. அக்கட்சி பா.ஜ., உடன் கூட்டணி அமைத்த நிலையில், மெகா கூட்டணியை உருவாக்க, பா.ம.க., - தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி போன்றவற்றுடன் ரகசிய பேச்சு நடத்தி வருகிறது.


அ.தி.மு.க., பொதுச்செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி, மக்களை நேரடியாக சந்திக்க, தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை, இன்று காலை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் துவக்குகிறார். சுற்றுப்பயணத்தின் போது மக்களை சந்திக்க, ரோடு ஷோவும் நடத்த உள்ளார்.

அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள பா.ஜ., கட்சி, பூத் கமிட்டியை வலுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை, சென்னை அடுத்த காட்டாங்கொளத்துாரில் நேற்று நடத்தியது. தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், அடுத்த மாதம் முதல், மண்டல வாரியாக ஏழு மாநாடுகளை நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.

புதிதாக கட்சி துவக்கி உள்ள நடிகர் விஜய், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். செப்டம்பர் முதல் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். தி.மு.க., - பா.ஜ., உடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ள விஜய், த.வெ.க., தலைமையிலான கூட்டணியில், இணைய விரும்பும் கட்சிகள் வரலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே அவர் கூட்டணி ஆட்சி என அறிவித்திருப்பது, தி.மு.க., கூட்டணியில் உள்ள பல கட்சிகளிடம் ஆசையை துாண்டி உள்ளது.

இதுவரை தனித்து போட்டியிட்டு வரும், நாம் தமிழர் கட்சியை, கூட்டணிக்கு இழுக்க அ.தி.மு.க., தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஏற்கனவே மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

தி.மு.க., கூட்டணியில் உள்ள, காங்கிரஸ், வி.சி., - ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் கம்யூ., - இந்திய கம்யூ., போன்ற கட்சிகள், வரும் தேர்தலில் தங்களுக்கு கூடுதல், 'சீட்' ஒதுக்க வேண்டும் என, தி.மு.க., மேலிடத்திடம் வலியுறுத்த துவங்கி உள்ளன. பா.ம.க.,வில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ராமதாஸ் தி.மு.க., அணியுடனும், அன்புமணி தரப்பில் அ.தி.மு.க., கூட்டணியுடனும் ரகசிய பேச்சு நடந்து வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில், தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., - நா.த.க., என நான்கு அணிகள் உருவாக வாய்ப்புள்ளது. ஆனால், அ.தி.மு.க., தரப்பில், த.வெ.க., - நா.த.க., உடன் ரகசிய பேச்சு நடந்து வருகிறது. எனவே, தேர்தலில் எத்தனை அணிகள் களம் இறங்கும் என்பதை, தற்போது உறுதியாக சொல்ல முடியாத நிலையே உள்ளது.

அனைத்து கட்சிகளும், தேர்தலுக்கு தயாராவதால், தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. விரைவில் அதிரடி காட்சிகள் அரங்கேற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்