சீரழியும் கல்வித்துறை: நயினார் நாகேந்திரன்

7 ஆடி 2025 திங்கள் 12:10 | பார்வைகள் : 128
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டாகியும், பணி நியமன ஆணை வழங்காமல் ஆசிரியர்களை, தி.மு.க., அரசு வதைத்து வருவது கண்டனத்திற்கு உரியது.
கடந்த 2023ல், 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 2024 பிப்ரவரியில் தேர்வு நடத்தி, மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து, ஓராண்டாகிறது.
இருப்பினும், பணி நியமன ஆணை வழங்க இயலாத அளவிற்கு, தி.மு.க., அரசின் நிர்வாகம் செயலற்று இருக்கிறதா?
ஒருபுறம் ஆசிரியர்கள் இன்றி, பல அரசு பள்ளிகள் அல்லல்படும் வேளையில், மறுபுறம், கலை கல்லுாரிகள், சட்ட கல்லுாரிகள், பல்கலைகள் என, அரசு கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் உயர் கல்வி துறை முடங்கியுள்ளது.
ஆசிரிய பணியிடங்களை நிரப்ப வேண்டிய தி.மு.க., அரசோ, இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்காமல் இழுத்தடிப்பது, பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யாதது, உதவி பேராசிரியர் தேர்வை நடத்தாது என, தன் திறனற்ற செயல்பாட்டால், கல்வி துறையை மேலும் சீரழித்து வருகிறது.
தமிழக கல்வி துறையின் மீதும், மக்களின் எதிர்காலம் குறித்தும் சிறிதேனும் அக்கறை இருந்தால், இதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல், தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு உடனே பணி நியமன ஆணை வழங்க வேண்டும். கல்லுாரிகளில் போதிய பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என கூறியுள்ளார்.