முஸ்லிம் சகோதரர்கள் இயக்கத்தின் ஊடுருவல் - மீண்டும் பாதுகாப்புச் சபைகூட்டப்படுகிறது – மக்ரோன்

7 ஆடி 2025 திங்கள் 11:13 | பார்வைகள் : 738
முஸ்லிம் சகோதரர்கள் (FRÈRES MUSULMANS) இயக்கத்தின் ஊடுருவல் தொடர்பான முக்கிய சந்திப்பு இன்று (திங்கள்) எமானுவல் மக்ரோனின் தலைமையில் நடைபெற உள்ளது. எலிசே மாளிகையில் இன்று காலை இந்த புதிய பாதுகாப்பு மன்ற கூட்டம் நடைபெற உள்ளது.
முந்தைய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில், எமானுவேல் மக்ரோன், இந்த விடயத்தில் புதிய முன்மொழிவுகளை அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
இது, அரசாங்கத்தின் முன்னுரிமை வாய்ந்த விடயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
எமானுவல் மக்ரோன், கடந்த மே மாத இறுதியில் நடைபெற்ற ஒரு பாதுகாப்பு மன்ற கூட்டத்தில் ஏற்பட்ட அதிருப்திக்குப் பின்னர், இப்போது மீண்டும் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார்.
உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தையோ, கல்வி அமைச்சர் எலிசபெத் போர்ன் மற்றும் விளையாட்டு அமைச்சர் மாரி பார்சாக் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.
மே 21 அன்று நடைபெற்ற முந்தைய பாதுகாப்பு சபை, அதில் விவாதிக்கப்பட வேண்டிய ரகசிய அறிக்கை பத்திரிகைகளில் வெளியானது குறித்து மக்ரோன் கடுமையாகப் பதிலளித்திருந்தார். இதற்கு உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தையோ காரணம் என அந்தச் சமயத்தில் தெரிவிக்கப்பட்டது.
'இது ஒரு முக்கியமான விடயம், அதற்கேற்ப புதிய முன்மொழிவுகளை அரசாங்கம் கொண்டு வர வேண்டும்' என்று அவர் கூறியிருந்தார்.
இச்சிக்கலைப் பற்றி செய்யப்பட்ட அந்த அறிக்கையில், 'தேசிய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக' இந்த ஊடுருவல் செயல்கள் இருக்கின்றன என்றும்,
'சமுதாயத்தை நோக்கி பொதுமக்களிற்குள் ஊடுருவும் ஒரு சக்திமிக்க கடுமையான இஸ்லாமிய அரசியல் திட்டம் இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் சகோதரர்கள் இயக்கம் என்பது, அடிப்படைவாத கடுமையான இஸ்லாமிய அரசியல் நோக்கங்களைக் கொண்ட இயக்கமாகவும், சமுதாயத்துக்குள் ஊடுருவி தங்கள் கருத்துகளை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.