நீதிபதி மீது வழக்கு பதிய அரசால் முடியாது : தன்கர்

8 ஆடி 2025 செவ்வாய் 09:52 | பார்வைகள் : 142
ஜூலை 8-- டில்லியில் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், தீயில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத அளவுக்கு, மத்திய அரசின் கைகள் கட்டப்பட்டு உள்ளதாக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்தார். 1991ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, நீதிபதி வர்மாவுக்கு எதிராக, எப்.ஐ.ஆர்., கூட பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைத்தபோது, வீட்டின் ஒரு அறையில், பாதி எரிந்த நிலையில், மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இது, நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எப்.ஐ.ஆர்., இல்லை
முறைகேடாக சம்பாதித்த பணத்தையே நீதிபதி வர்மா பதுக்கி வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது; அதை அவர் மறுத்தார். எனினும், அவரை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம் செய்தார்.
அங்கு அவருக்கு பணி ஒதுக்க வேண்டாம் என்றும், அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்தினார்.
மேலும், நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கிய விவகாரம் குறித்து விசாரிக்க, குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
டில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, டில்லி தீயணைப்பு படை தலைவர் அதுல் கார்க் உள்ளிட்ட 50 பேரிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த விவகாரத்தில், இதுவரை யஷ்வந்த் வர்மா மீது எப்.ஐ.ஆர்., கூட பதிவு செய்யப்படவில்லை.
இதற்கிடையில், அவரை பதவியில் இருந்து நீக்கும்படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், வர்மாவை பதவி நீக்குவது அவ்வளவு எளிதல்ல. பார்லிமென்டில் அவர் மீது, 'இம்பீச்மென்ட்' எனப்படும், பணி நீக்க தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
வேதனை
தீர்மானத்தை கொண்டு வருவதற்கே, லோக்சபாவில், 100 எம்.பி.,க்களின் ஆதரவும், ராஜ்யசபாவில், 50 எம்.பி.,க்களின் ஆதரவும் தேவை. வரும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில், இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்நிலையில், நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரத்தில், மத்திய அரசு கூட எதுவும் செய்ய முடியாத அளவுக்கு கைகள் கட்டப்பட்டு இருப்பதாக, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் வேதனை தெரிவித்துள்ளார்.
ஷேக்ஸ்பியரின், காவியத்தில், ஜூலியஸ் சீசர் தன் சகாக்களாலேயே கொல்லப்பட்டதை ஒப்பிட்டு, 'கட்டுக்கட்டாக பணம் சிக்கிய ஆதாரம் இருந்தும், நீதித்துறையில் அங்கம் வகிக்கும் ஒருவராலேயே, அத்துறை தர்மசங்கடத்தில் சிக்கி தவிக்கிறது' என, தன்கர் தெரிவித்துஉள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேசிய சட்டப்பல்கலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது, இதுபற்றி ஜக்தீப் தன்கர் பேசியதாவது:
இந்தியாவை ஒரு முதிர்ந்த ஜனநாயக நாடாக உலகம் பார்க்கிறது. இங்கு, சட்டத்தின் முன் சமத்துவம் இருக்க வேண்டும்; ஒவ்வொரு குற்றமும் விசாரிக்கப்பட வேண்டும். ஆனால், நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டும் கூட, இதுவரை எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படவில்லை.
அடித்தளமே ஆட்டம்
இவ்வளவு பணம் சிக்கிய போது, அது கறைபடிந்த பணமா, எந்த வகையில் சம்பாதிக்கப்பட்டது, யாருக்கு சொந்தமானது, நீதிபதி வீட்டில் குவிந்தது எப்படி என விசாரிக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில், பல தண்டனை விதிகள் மீறப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தின் ஆணி வேர் வரை நாம் செல்ல வேண்டும்.
ஆனால், மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கும் நீதித்துறையின் அடித்தளமே ஆட்டம் கண்டுள்ளது. வேறு எந்த துறையையும் விடவும் நீதித்துறையை மக்கள் மிகவும் நம்பி மதிக்கின்றனர்.
அது சிதைந்தால் மோசமான சூழல் ஏற்படும். 140 கோடி மக்கள் தொகை உடைய நாடு பாதிக்கப்படும். கடந்த 1991ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாகவே, எப்.ஐ.ஆர்., கூட பதிவு செய்ய முடியாமல் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.