ரஷ்யாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் சடலமாக மீட்பு

8 ஆடி 2025 செவ்வாய் 12:33 | பார்வைகள் : 196
ரஷ்யாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட போக்குவரத்து அமைச்சர் மாஸ்கோவிற்கு வெளியே தனது காரில் துப்பாக்கி குண்டு காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி புடினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றே அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிய வந்துள்ளது.
முன்னதாக வெளியிடப்பட்ட ஜனாதிபதி ஆணையில், 53 வயதான ரோமன் ஸ்டாரோவோயிட், பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான எந்த காரணத்தையும் குறிப்பிடவில்லை. ஆனால், அவர் ஒரு காலத்தில் பதவி வகித்த பகுதியில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணை தொடர்பாக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்றே அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகம் எழுப்பினர்.
மேலும், அதே ஊழல் தொடர்பான கேள்விகள் காரணமாக அவரது பதவி பல மாதங்களாக கேள்விக்குறியாக இருந்தது என்றே போக்குவரத்து வட்டாரத்தில் கூறப்படுகிறது.
2022 ல் குர்ஸ்க் பகுதியில் உக்ரைனுடனான ரஷ்யாவின் எல்லையை வலுப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 246 மில்லியன் டொலர் நிதி முறையாக செலவிடப்பட்டதா அல்லது அந்தப் பணத்தில் சில மோசடி செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஸ்டாரோவைட்டின் மரணத்திற்கான உண்மையான காரணம் தொடர்பில் விசாரித்து வருவதாக ரஷ்யாவின் விசாரணைக் குழு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
சடலத்தின் அருகே துப்பாக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
சில ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், அவர் தலையில் சுடப்பட்ட நிலையில் தமது டெஸ்லா காருக்கு வெளியே புதரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் மாஸ்கோ பகுதியில் உள்ள அவரது வீட்டிலிருந்து வெகு தொலைவில் இல்லாத ஒரு பூங்காவிற்கு அருகில் வாகனம் மீட்கப்பட்டுள்ளது. மே 2024 இல் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, ஸ்டாரோவோயிட் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் குர்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநராக இருந்தார்.
அவர் போக்குவரத்து அமைச்சரான மூன்று மாதங்களுக்குப் பிறகு, உக்ரேனிய துருப்புக்கள் ரஷ்ய எல்லைக்குள் மிகப்பெரிய வெளிநாட்டு ஊடுருவலாக குர்ஸ்க் எல்லையைக் கடந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வெளிநாட்டு இராணுவம் ஒன்று ரஷ்ய எல்லையில் ஊடுருவது இதுவே முதல்முறை.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஸ்டாரோவோயிட்டிற்கு பதிலாக ஆளுநராக நியமிக்கப்பட்ட அலெக்ஸி ஸ்மிர்னோவ், பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார், இதுவே குர்ஸ்க் உக்ரேனிய தாக்குதலுக்கு இலக்கானதன் காரணமாக கூறப்பட்டது.