செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் உள்ள இடங்களிலும் மனித எலும்புகள்

8 ஆடி 2025 செவ்வாய் 11:33 | பார்வைகள் : 152
செம்மணி புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியத்துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகளில் மனித என்பு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவை சிதிலங்களாக காணப்படுவதனால்,அடையாளப்படுத்துவதில், அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை செம்மணியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மேலும் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 03எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 12ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது மேலும் 05எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 52ஆக உயர்வடைந்துள்ளது.
அதேவேளை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூட்டு தொகுதியில் இன்றைய தினம் 03 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இதுவரையில் 47 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் , மனித புதைகுழிக்கு அருகில் துப்பரவு பணிகளை முன்னெடுத்து , புதைகுழிக்குள் வெள்ள நீர் உட்புகாதவாறு , மண் அணை அமைக்கும் பணிக்காக மண் அகழப்பட்ட வேளை , அங்கும் மனித சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டமையால் , அப்பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டு , அவ்விடத்திலும் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.