ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது ட்ரம்ப் கடும் அதிருப்தி

8 ஆடி 2025 செவ்வாய் 14:33 | பார்வைகள் : 220
அமெரிக்கா (USA) உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) மீது தான் அதிருப்தியில் உள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
வெள்ளை மாளிகையில் நேற்று (7) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ரஷ்யாவால் அதிக பாதிப்புகளை உக்ரைன் சந்தித்துள்ளதாக கடுந்தொனியில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதலில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டதாகவும், உக்ரைனின் தற்காப்பிற்காகக் கூடுதல் ஆயுதங்கள் அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்குவது, கடந்த சில நாள்களுக்கு முன்பு ட்ரம்ப்பால் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் உக்ரைன் பலத்த சேதாரங்களைச் சந்தித்து வருகின்றது.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது 43 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா நடத்திய குறித்த தாக்குதல்களில் கார்கிவில் உள்ள குடியிருப்பு கட்டடங்கள், பல்கலைக்கழகக் கட்டடம் மற்றும் பிராந்திய ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் உள்ளிட்ட இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழலில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு போரை தீவிரப்படுத்த கூடிய ஒன்றாகவே உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.