செம்மணியில் இரண்டாவது புதைகுழியில் அகழ்வு பணிகள் தொடர்பில் வெளியான தகவல்

9 ஆடி 2025 புதன் 13:15 | பார்வைகள் : 184
யாழ்ப்பாணம், செம்மணியில் இரண்டாவது மனிதப் புதைகுழி இருப்பதற்கான சந்தேகத்தின் அடிப்படையில், குறித்த பகுதி "தடயவியல் அகழ்வாய்வு தளம் இல. 02" என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதே பகுதியில் முன்னதாகவே, சித்துப்பாத்தி மயானத்தில் மனிதப் புதைகுழி ஒன்று அடையாளம் காணப்பட்டு, அங்கு அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை அந்த முதற்கட்ட அகழ்வில் இருந்து 56 எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 50 எலும்புக்கூட்டுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், செய்மதி (satellite imagery) மற்றும் கண்காணிப்பு தரவுகளின் அடிப்படையில், அருகிலுள்ள இன்னொரு பகுதியும் புதைகுழியாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்டது. நீதிமன்ற அனுமதியுடன் அந்தப் பகுதியில் ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புதிய தளத்திலும் மனித எலும்பு சிதிலங்கள் சிக்கலான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக அகழ்வுப் பணிகள் பின்னரே தெளிவான தகவல்களை வழங்க முடியும் என பொறுப்பேற்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.