பொய்யான விளம்பரங்களுக்காக லிடில் மீது €43 மில்லியன் அபராதம்!

9 ஆடி 2025 புதன் 19:23 | பார்வைகள் : 922
ஜெர்மனியை சேர்ந்த சில்லறை வணிக நிறுவனமான லிடில் (Lidl), தொலைக்காட்சி விளம்பரங்களில் விலை குறைந்த பொருட்கள் எனக் கூறி, அவை கடைகளில் 15 வாரங்கள் கிடைக்கவில்லை என்பதற்காக, பரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் 43 மில்லியன் யூரோக்கள் இழப்பீடு செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பொய்யான விளம்பரங்கள் Intermarché நிறுவனத்துக்கு வர்த்தக இழப்பை ஏற்படுத்தியதால், அதை சரிசெய்ய இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், லிடில் ஒவ்வொரு மீறலுக்கும் 10,000 யூரோ அபராதத்துக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்த தீர்ப்பு, லிடில் தனது விளம்பர நடைமுறையை மாற்ற கட்டாயப்படுத்தும் வகையில் உள்ளது.
பெரும்பாலும் பார்க்சைடு (Parkside) என்ற உதிரி உபகரணங்கள் மற்றும் சில்வர்கிரெஸ்ட் (Silvercrest) என்ற சமையல் சாதனங்கள் போன்ற ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மட்டுமே விளம்பரப்படுத்தப்பட்டன. ஆனால் அவை 1600 கடைகளில் கிடைக்காமல், சில குறிப்பிட்ட கடைகளில்தான் கிடைத்துள்ளன.
தற்போது Carrefour நிறுவனமும் இதே காரணத்துக்காக 100 மில்லியன் யூரோக்கும் அதிகமான இழப்பீட்டை கோரி வழக்குத் தொடர்ந்துள்ளது.